அழகர்மலை பதினெட்டாம் படி கருப்பண்ணசாமிக்கு மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 11 அடி உயர அரிவாள் காணிக்கை: வழக்குகளில் இருந்து விடுபட சிறப்பு பூஜை?

அலங்காநல்லூர்: அழகர்மலையில் உள்ள பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயிலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 11 அடி உயரமுள்ள பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கினார். சொத்து குவிப்பு உள்ளிட்ட வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக அவர் சிறப்புப் பூஜை நடத்தியதாக கட்சியினர் தெரிவித்தனர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது இவர் அதிகாரத்தை பயன்படுத்தி, பல்வேறு வகையிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, அவரது அலுவலகம், வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் தொடர்ந்து  அதிரடி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தற்போது நடந்து வரும் அதிமுக உட்கட்சி தேர்தல் பார்வையாளராக மதுரை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிளைக்கழக ஒன்றிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2  தினங்களாக மதுரையில் முகாமிட்டுள்ள இவர், பல முக்கிய கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து வருவதாக கூறப்பட்டது. நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெரியபுள்ளான், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ அய்யப்பன்.

முன்னாள் எம்எல்ஏ சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள சக்தி வாய்ந்த பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயிலுக்கு சென்றார். அங்கு, 11 அடி உயர ராட்சத அரிவாள் காணிக்கை செலுத்தி, விசேஷ பூஜைகள் செய்துள்ளார். தன் மீதுள்ள வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி அவர் வழிபாடு நடத்தியதாக கட்சியினர் தெரிவித்தனர். தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயில், சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை குரு பகவான் கோயில் உள்ளிட்ட பல்வேறு  பரிகார தலங்களுக்கு சென்று சிறப்பு பரிகார பூஜைகள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: