கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை, கழிப்பறையை சீரமைக்க வேண்டும்: பயணிகள் கோரிக்கை

திருப்போரூர்: கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை, கழிப்பறையை சீரமைக்கவும் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைப் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் கோவளம் செல்லும் சாலையில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை உயர்நீதிமன்றம், பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம், அடையாறு உள்ளிட்ட சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு வரும் பொது மக்களுக்காக இரண்டு நிழற்குடைகள், ஒரு பொதுக் கழிப்பறை மற்றும் மகளிர் சுகாதார வளாகம் ஆகியவை கட்டப்பட்டன.

இந்நிலையில், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பேருந்து வரும் வரை இந்த நிழற்குடையில் அமர்ந்து காத்திருப்பர். தற்போது, போதுமான பராமரிப்பு இல்லாததால் இந்த நிழற்குடையின் கூரைகள் பெயர்ந்து தொங்குகின்றன. இது எப்போது,  உடைந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. இந்த நிழற்குடையில் உள்ள நாற்காலிகளும் உடைந்துள்ளன. மேலும், பேருந்து நிலையத்திற்கு வரும் குழந்தைகள், பெண்கள் மகளிர் சுகாதார வளாகத்தையும், பொதுக்கழிப்பறையை ஆண் பயணிகள், ஓட்டுனர்கள், நடத்துனர்களும் பயன்படுத்தி வந்தனர். தற்போது, இவையும் போதுமான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், குழாய்களும், கழிப்பறை கருவிகளும் உடைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் பொதுமக்களும், போக்குவரத்துக் கழக ஊழியர்களும் ஒரே பொதுக் கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். அதிகம் பேர் பயன்படுத்துவதாலும் முறையாக கழிப்பறை பராமரிக்கப்படாததாலும் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மூக்கைப் பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை  ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் (இங்கு தங்கும்) தங்கும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அதிகாலை நேரங்களில் இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, கேளம்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள பயணிகள் நிழற்குடைக்கு புதிய கூரை அமைத்தும்,  வளாகத்தில் உள்ள கழிப்பறையை முறையாக பராமரித்தும், மகளிர் சுகாதார வளாகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்விளக்கு, தண்ணீர், குழாய்கள் போன்றவற்றை அமைத்து மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து விட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: