ரிமோட் கன்ட்ரோல் குற்றச்சாட்டு டெல்லிக்கு மட்டுமல்ல; இஸ்ரேலுக்கும் பஞ்சாப் அதிகாரிகளை அனுப்புவேன்: எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மான் பதிலடி

சண்டிகர்: ‘டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறார்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மறுத்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டபேரவை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப்பில் 92 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இக்கட்சியை சேர்ந்த காமெடி நடிகரும், கட்சியின் எம்பி.யுமான பகவந்த் சிங் மான் கடந்த மாதம்  முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்றவுடன் அதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் எண் வெளியிட்டது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், பஞ்சாப் அரசின் உயர் அதிகாரிகள், டெல்லிக்கு சென்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினர். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘பகவந்த் மான் சுயமாக எந்த முடிவையும் எடுப்பது இல்லை. டெல்லியில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் மூலம் அவர் இயக்கப்படுகிறார். ஒரு முதல்வர் இன்னொரு மாநில அரசின் விவகாரத்தில் தலையிடுவது தவறு. இது, மாநிலங்களின் கூட்டமைப்பு விதிகளை மீறிய செயல்,’ என்று விமர்சனம் செய்துள்ளன.  முன்னாள் முதல்வரும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங், ‘‘பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்’’ என்று வர்ணித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பகவந்த் சிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அரசின் அனைத்து முடிவுகளையும் நான்தான் எடுக்கிறேன். பஞ்சாப் அரசின் உயர் அதிகாரிகள் டெல்லி சென்று, அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலை சந்தித்தனர். பயிற்சிக்காகவே அவர்களை நான் டெல்லிக்கு அனுப்பினேன். அதே அதிகாரிகள் குஜராத், தமிழ்நாட்டுக்கும் சென்று வந்தனர்.  வரும் நாட்களில் டெல்லி, குஜராத், ஆந்திரா, தமிழ்நாட்டுக்கும் செல்ல உள்ளனர். தேவைப்பட்டால் இஸ்ரேலுக்கும் அதிகாரிகளை அனுப்புவேன். கடந்த ஆட்சியில் நடந்த கல்வி நிதி உதவி திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக ஒரு முக்கிய பிரமுகர் விரைவில் கைது செய்யப்படலாம்,’’ என்றார்.

Related Stories: