உடுமலை: உடுமலையையடுத்த மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் திருமூர்த்திமலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இங்கு கோவிலுக்கு மேல் சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. இதனால் இது ஆன்மீக சுற்றுலாத் தலமாக உள்ளது. இதனால் தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தினசரி இங்கு வருகின்றனர். கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் பஞ்சலிங்க அருவி வறண்டு காணப்பட்டது.கடந்த சில நாட்களாக குறைந்த அளவில் நீர் வரத்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று அருவியின் நீராதாரங்களான கொட்டையாறு, பாரப்பட்டியாறு, குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மதியம் முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை முதல் பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரை புரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம் அமணலிங்கேஸ்வரர் கோவிலைச் சூழ்ந்தது. சப்தகன்னியர் சன்னதியை மூழ்கடித்த வெள்ளப்பெருக்கு அமணலிங்கேஸ்வரர் சன்னதி மட்டுமல்லாமல் முருகன், விநாயகர் சன்னதிகளும் சூழ்ந்தது. இதனால் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதித்தனர். கடும் கோடை காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.