தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் உப்பளங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் தொடர் மழை பெய்தது. நேற்றும் காலையில் இருந்து இரவு வரை விடாமல் கொட்டி தீர்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மாவட்டத்தில் ஏற்கனவே முடங்கிய உப்பளங்களில் மீண்டும் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான சுமார் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்கள் அடியோடு தண்ணீரில் மூழ்கியது. தற்போது மாவட்டத்தில் உப்பு உற்பத்தி இல்லாத நிலையில் ஜிப்சம் வாறும் பணிகள் ஒரு சில உப்பளங்களில் துவங்கியிருந்தன.
ஆனால் இந்த மழை காரணமாக உப்பளங்களில் ஜிப்சம் எடுக்கும் பணியும் முடங்கியது. மேலும் மழையால் கட்டுமான தொழில், தீப்பெட்டி தொழில், மீன்பிடித்தல் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் மழை காரணமாக ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இதற்கிடையே நேற்று காலை வரை மாவட்டத்தில் தூத்துக்குடி-3 மிமீ, ஸ்ரீவை-5, திருச்செந்தூர்-60, காயல்பட்டினம்-30, குலசை-50, சாத்தான்குளம்-31, கழுகுமலை-21, கயத்தாறு-23, கடம்பூர்-2, மணியாச்சி-4, வேடநத்தம்-2, கீழஅரசரடி-2 மிமீட்டரும், மொத்தம் மாவட்டம் முழுவதும் 236 மி.மீட்டரும், சராசரியாக 12.46 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.
மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.மேலும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என ஒருசில பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்கள் வேக, வேகமாக பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.ஆனால், காலை 8 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது.
பலத்த மழையாக பெய்ததால் மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்பட்டனர். பலர் மழையில் நனைந்தபடி சென்றனர். சில பெற்றோர் தங்களது குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் மழையில் நனைந்தவாறே பள்ளிக்கு அழைத்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்திருக்கலாம். இல்லையெனில் அந்தந்த வட்டாட்சியர் மூலம் மழை அதிகமாக பெய்த பகுதிகளுக்கு விடுமுறை அறிவிக்கலாம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு செல்லும் நிலையை இந்திய மாணவர் சங்கம் அறிந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தகவல் தெரிவித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
The post தூத்துக்குடி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை appeared first on Dinakaran.