வேலூர் ஆவின் பொதுமேலாளருக்கு டெண்டர்களை ரத்து செய்யும்படி கலெக்டர் பெயரில் போலி இமெயில்: ஒப்பந்ததாரர் அதிரடி கைது

வேலூர்: வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம், ஆவின் பொதுமேலாளர் ரவிகுமாருக்கு கடந்த மார்ச் 8ம் தேதி வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பெயரில் இமெயில் மூலம் உத்தரவு கடிதம் ஒன்று வந்தது. அதில் ஆவினில் கடந்த 2021 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட 12 வகையான டெண்டர் ஒப்பந்தப்புள்ளிகளில் திருத்தம் மேற்கொண்டு மறு டெண்டர் வெளியிடும்படி கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் விசாரித்தபோது, அது போலியான இமெயில் முகவரி என்றும், கலெக்டர் அதுபோல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் புகாரையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கலெக்டரின் பெயரில் போலி இமெயில் அனுப்பியது காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆவின் ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் (35) என்பது தெரியவந்தது.

இவர் ஏற்கனவே ஆவினில் பால் கேன்கள், டிரேக்கள், இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்ததாரர் என்றும், அவர் சரிவர பணிகளை மேற்கொள்ளாததால், சிக்கல் இருந்ததால், ஒப்பந்தங்களை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வைப்பதற்கு இதுபோன்ற செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயச்சந்திரனை குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: