புதுச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த முயற்சி 600 ஆண்டுகள் தொன்மையான ரூ.12 கோடி மதிப்புள்ள நடராஜர், விஷ்ணு சிலைகள் மீட்பு: எந்த கோயிலில் திருடப்பட்டது என விசாரணை

சென்னை: புதுச்சேரி சப்ரெய்ன் தெருவில் பழமையான சிலைகள் மறைத்து வைத்திருப்பததாகவும், பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த முயற்சி நடப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கூடுதல் எஸ்பி அசோக் நடராஜன் தலைமையில் டிஎஸ்பி மோகன், ஆய்வாளர் செல்வி வசந்தி ஆகியோர் புதுச்சேரி மாநிலம் சப்ரெய்ன் தெருவில் உள்ள ஜோசாப் கொலம்பானிக்கு சொந்தமான கட்டிடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தொன்மை வாய்ந்த நடராஜர், வீணாதார சிவன், விஷ்ணு ஆகிய 3 உலோக சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அப்போது சிலையை பதுக்கி வைத்திருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த ஜோசாப் கொலம்பானி தான் இந்த சிலையை வைத்திருந்ததாகவும், யார் மூலம் இந்த சிலை வந்தது என்று தங்களுக்கு தெரியாது என்றும் கூறினார். ஜோசாப் கொலம்பானி 3 சிலைகளை சுற்றுலா பணிகள் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு கடத்த முயன்று அது தோல்வியில் முடிவடைந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் 3 சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.  

பின்னர் சிலைகள் எந்த நூற்றாண்டை சேர்ந்தது மற்றும் எந்த கோயிலில் திருடப்பட்டது என அறிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொல்லியல் துறை நிபுணர்கள் உதவியை நாடினார். அப்போது, மீட்கப்பட்ட சிலைகள் 600 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், சோழர்கள் மற்றும் விஜய நகரப் பேரசுக்கு இடைப்பட்ட ஆட்சிக்காலத்தை சேர்ந்தவை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஐம்பொன்களான 3 உலோக சிலைகள் தொன்மையானது என்று தொல்லியல் சான்று பெறப்பட்டுள்ளது.

இதனால் தற்போதைய சர்வதேச மதிப்பு ரூ.12 கோடி என்றும் 1980க்கு முன்பு தொன்மையான கோயில்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதைதொடர்ந்து மீட்கப்பட்ட சிலைகள் எப்படி வந்தது, ஜோசப் கொலம்பானி மீது சிலை கடத்தல் வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகினறனர். மீட்கப்பட்ட சிலை தற்போது சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: