திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்

திருப்பூர் :  திருப்பூர் அரசு மருத்துவமனையில் 7 மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்றிய அரசு டாக்டர்களை, டீன் முருகேசன் பாராட்டினார்.திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார் (30). இவரது மனைவி சத்யா (27). சத்யா கடந்த 2 முறை கர்ப்பம் அடைந்த நிலையில் கரு கலைந்தது. இதன் பின்னர் 3வது முறையாக கர்ப்பம் தரிந்தார். இதற்கிடையே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் 7 மாதம் ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு பிரசவம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவருக்கு 650 கிராம் எடையில் பெண் குழந்தை பிறந்தது. பிறக்கும் குழந்தைகள் குறைந்தபட்சம் 2 முதல் 2.5 கிலோ வரை இருக்க வேண்டும். மிகவும் எடை குறைவாக பிறந்ததால், டாக்டர்கள் குழு அந்த குழந்தையை பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மேலும், நுரையீரல் வளர்ச்சி பெற சர்பாக்சண்ட் மருந்து, செயற்கை சுவாச வசதி மற்றும் தாய்ப்பால் வங்கி மூலம் தாய்ப்பால் உள்ளிட்டவைகளை கொடுத்து கண்காணித்தனர். இதன் பலனாக அந்த பெண் குழந்தை 1.5 கிலோ எடை வந்துவிட்டது.

தற்போது தாய் சத்யாவிடம் தாய்ப்பால் குடிக்கும் அளவிற்கு குணமடைந்துள்ளது. செயற்கை சுவாச கருவியும் நீக்கப்பட்டுள்ளது. நுரையீரலும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று சத்யா தனது குழந்தையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எடை குறைவாக பிறந்த குழந்தையை காப்பாற்றிய டாக்டர்கள் செந்தில்குமார், பிரியா விஸ்வாசம், தனசேகர் மற்றும் நர்சுகள் ராஜேஸ்வரி, மகேஷ்வரி ஆகியோரை டீன் முருகேசன் பாராட்டினார்.

Related Stories: