திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்

* ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்

* முறையான ஏற்பாடுகள் செய்யாததால் தவிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடத்தியது.இந்த முகாமில், 21 வகையான மாற்றுத்திறனாளிகள் உரிய சான்றுகளுடன் நேரில் வந்து, தங்களுக்கான தேசிய அடையாள அட்டை புதிதாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்போர் அதனை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், முகாம் நடைபெறும் அதே நாளில், புதிய அடையாள அட்டை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அட்டை உடனடியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் குவிந்தனர்.காலை 10 மணிக்கு முகாம் தொடங்கும் என தெரிவித்திருந்தது. எனவே, காலை 8 மணியில் இருந்தே மாற்றுத்திறனாளிகள் குவியத் தொடங்கினர். ஆனால், சிறப்பு முகாமுக்கான முறையான ஏற்பாடுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிக்கான முறையாக செய்யவில்லை. அதனால், முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள் பெரிதும் தவித்தனர்.

குறிப்பாக, நீண்ட நேரம் நிற்க முடியாத, நடத்த இயலாத, முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தனர். பாதிப்பின் தன்மையை கண்டறிய அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனை முகாமிலும், குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்களே வந்திருந்தனர். எனவே, ஆயிரக்கணக்கில் குவிந்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மருத்துவ பரிேசாதனை செய்ய இயலவில்லை. அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை சான்று பெற்று வருமாறு திருப்பி அனுப்பினர்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சிறிய அறையில், அதிகாரிகள் முகாமிட்டு விண்ணப்பங்களை பெற்றனர். எனவே, அந்த அறைக்குள் செல்ல கூட்டம் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பலமணி நேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் விண்ணப்பங்களை மட்டுமே பெற்றுக்கொண்டு, மற்றொரு நாளில் அடையாள அட்டை வழங்கப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதனால், மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பஸ்சில் பயணிப்பதே சிக்கலான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நீண்ட தூரம் பயணித்து வந்தும் அடையாள அட்டை பெற முடியாதது வேதனையை ஏற்படுத்தியது. எனவே, இனிவரும் நாட்களில் இது போன்ற முகாம்களை முறையாக ஏற்பாடு செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

Related Stories: