வேலூரில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி-போலீசார் விசாரணை

வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நிலபிரச்னை தொடர்பாக வாலிபர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காட்பாடி அடுத்த காசி குட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ்(32). இவர் தனக்கு சொந்தமான 16 சென்ட் இடத்தை அதேபகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ₹3 லட்சத்திற்கு அடமானம் வைத்தாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இடத்தை விற்பனை செய்வதாக கூறி லோகேஷ், ராமலிங்கத்திடம் சென்றுள்ளார். அப்போது, அந்த இடம் தனக்கு சொந்தமானது என ராமலிங்கம் கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதுகுறித்து, லோகேஷ் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் கடந்த 26ம் தேதி அன்றும் அதற்கு முன்பும் புகார் கொடுக்க சென்றபோது புகாரை ஏற்கவில்லையாம்.இந்நிலையில், லோகேஷ் நேற்று மாலை 5 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக போர்ட்டிகோவில் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்த கலெக்டர் வாகன டிரைவர் தடுக்க முயன்றார். பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் உடனடியாக லோகேஷ் மீது தண்ணீர் ஊற்றினார்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லோகேஷை அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற லோகேஷ் சொந்தமாக கூறப்படும் நிலம், புறம்போக்கு நிலம் என தெரிகிறது. மேலும் லோகேஷ் கேள்விகளுக்கு சரிவர பதில் அளிக்காமல் குழப்பி வருகிறார். அதுமட்டுமின்றி மனநலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாக தெரிகிறது. இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

போலீஸ் சோதனை தீவிரப்படுத்த வேண்டும்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு வருபவர்களை சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். அதையும் மீறி பெட்ரோல், மண்ணெண்ணெய், பிளேடு உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்கின்றனர். மக்கள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெறும் நாளை தவிர மற்ற நாட்களில், கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை போலீசார் சோதனை செய்வதில்லை. இனிவரும் நாட்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களை தீவிர சோதனை செய்ய வேண்டும்.

Related Stories: