வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட 30 போலீசார் கூண்டோடு மாற்றம்: சாராய விற்பனையை தடுக்காததால் டிஐஜி அதிரடி

வேலூர்: சாராய விற்பனையை தடுக்காததால் வாணியம்பாடி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் 30 பேரை கூண்டோடு மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் கடந்த பல ஆண்டுகளாக சாராய விற்பனை கொடிகட்டி பறந்து வருகிறது. சாராய வியாபாரியான மகேஷ்வரி என்பவர் 8 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 80 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆனாலும் வாணியம்பாடி பகுதியில் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தார். அப்பகுதி மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மகேஷ்வரி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் வாணியம்பாடியில் சாராய விற்பனையை தடுக்க தவறிய வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிமுத்துவை பணியிடமாற்றம் செய்து டிஐஜி ஆனிவிஜயா நேற்று அதிரடி உத்தரவிட்டார். மேலும் டிஐஜி உத்தரவின்பேரில், திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன், வாணியம்பாடி தாலுகா காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐகள், தலைமைக்காவலர்கள் உட்பட மொத்தம் 29 போலீசாரை கூண்டோடு மாற்றம் செய்துள்ளார். இதுகுறித்து டிஐஜி ஆனிவிஜயா கூறுகையில், ‘‘குற்றசம்பவங்களை தடுக்கவும், பணியை சரியாக செய்யாத காவலர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: