திருவாரூர் மாவட்டத்தில் வெயிலுக்கு இதமாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மிதமான மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகத்தில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் கடந்த ஒரு மாததிற்கும் மேலாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ. மாணவிகள், பணிக்கு செல்வோர் மற்றும் தொழிலாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் மதியம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பலத்த மழை பெய்தது.

பின்னர் இரவு 10 மணியளவில் திருவாரூர் பகுதியில் சுமார் 15 நிமிடம் வரையில் மழை பெய்தது. பின்னர் நேற்று காலை முதல் மதியம் 12 மணி வரையில் மாவட்டம் முழுவதும் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் அதன் பின்னர் மன்னார்குடி, திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக தெற்கு வீதி, மேல வீதி, கமலாலயம் வடகரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கியது. மேலும் கடும் வெப்பத்தில் இருந்து வந்த பொதுமக்களுக்கு இந்த மிதமான மழை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை பகுதியில் சில நாட்களாக கடும் வெப்பத்துடன் வெயில் காணப்பட்டது. இந்த கடும் வெயிலால் மக்கள் வெளியே வர தயங்கி சென்று வந்தனர். இதற்கிடையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல பகுதியில் சென்ற வாரத்தில் மழை பெய்து வந்த நிலையில் கூட முத்துப்பேட்டை பகுதியில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது அதேபோல் நேற்று 2வது நாளாக காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை இடிமின்னலுடன் பெய்ததுடன். அதனை தொடர்ந்து இரவு வரை இடைவிடாது தூறல் மழையாக நசநசவென்று பெய்து கொண்டே இருந்தது.

Related Stories: