பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கம்: புதிய பிரதமராக நாளை ஷபாஸ் ஷெரீப் அதிகாரபூர்வ தேர்வு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது. எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது மட்டுமின்றி, அவர் பிரதமர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் நாளை முறைப்படி அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால், கடந்த மார்ச் 28ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன.

தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார். இதனால் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. வழக்கின் முடிவில் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.

அதாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்கவே, அவர்கள் ராஜினாமா செய்வதாக தகவல் வெளியானது. அதிர்ச்சியடைந்த அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற அவமதிப்பு விசாரணையை ெதாடங்குவோம் என்று எச்சரித்தனர். நிலைமை கைமீறி போனதால் நள்ளிரவு 12 மணிக்கு 10 நிமிடங்களுக்கு முன் வாக்கெடுப்பு நடத்துவதாக சபாநாயகர் அசாத் கைசர் ஒப்புக்கொண்டார். இதன்பின் நடந்த அடுத்தடுத்து ஒத்திவைப்பு, விவாதம் என்று வாக்கெடுப்பு தள்ளிக்கொண்டே போனது. சபாநாயகர் அடிக்கடி பிரதமர் இம்ரான் கானை சந்தித்து ஆலோசனை நடத்திக்கொண்டே இருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்தச் சொல்லி முழக்கமிட்டனர்.

நாடாளுமன்றத்தில் பரபரப்பு நிலவிவந்த அதேநேரம், இஸ்லாமாபாத் விமான நிலையம் திடீரென ராணுவ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் விமான நிலையம் வருவதென்றால் அரசின் தடையில்லாச் சான்று வேண்டும் என்றும், மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இம்ரான் கான் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நாடாளுமன்ற வாசலில் குவிந்தனர். இப்படியாக அடுத்தடுத்த நாடகங்கள் அரங்கேறி வந்த நிலையில், நள்ளிரவு 12.30 மணிபோல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது. இதன் முடிவுகள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. பிரதமர் பதவியில்  இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு இம்ரான் கான் ஆளானார். இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம்  நிறைவேற்றியதும் பாகிஸ்தான் பாராளுமன்றம் திங்கட்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இம்ரான்கான்,  பிரதமர் அலுவலக இல்லத்தில் இருந்து இரவோடு இரவாக வெளியேறினார். இதுகுறித்து பிஎம்எல்-என் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மரியம் ஔரங்கசீப்பின் கூறுகையில், ‘அவையை வழிநடத்தும் தலைவராக செயல்பட்ட பிஎம்எல்-என் கட்சியின் அயாஸ் சாதிக், அமர்வுக்கு தலைமை தாங்கியதால் வாக்களிக்க முடியவில்லை. இம்ரான் கானின் பிடிஐ கட்சியின் 22 அதிருப்தி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை’ என்றார். நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியுற்றதால், அந்நாட்டின் பிரதமராக ஒருவரை எதிர்கட்சிகள் தேர்வு செய்யலாம்.

அதன் மூலம் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை எதிர்கட்சியால் ஆளும் அதிகாரத்தை கையில் வைத்திருக்க முடியும் அல்லது அந்த தேதிக்குள் புதிய தேர்தல்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். இந்நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நாளை (ஏப். 11)  ஜனாதிபதி ஆரிப் ஆல்வியை சந்திக்கிறார். தனக்கு ஆதரவளிக்கும் எம்பிக்களின்  பட்டியலை அவரிடம் சமர்பிப்பார். தொடர்ந்து அவர் புதிய அரசின் தலைவராக நாளை  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய விடியல் பிறந்துள்ளது!

* நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியுற்ற நிலையில், பாகிஸ்தானின் வருங்கால பிரதமரும், எதிர்கட்சி தலைவருமான ஷபாஸ் ஷெரீப் நேற்றிரவு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ‘பாகிஸ்தானுக்கு இன்று ஒரு புதிய விடியல் பிறந்துள்ளது. பாகிஸ்தான் மக்களின் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டுள்ளன. யாருடனும் நாங்கள் அத்துமீறி செயல்படமாட்டோம். எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவி மக்களை சிறைக்கு அனுப்ப மாட்டோம்; சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தை பாராட்டுகிறேன். பாகிஸ்தானை குவாட்-இ-அசாமின் பாகிஸ்தானாக மாற்றுவோம்’ என்றார்.

* பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி கூறுகையில், ‘கடந்த மூன்று ஆண்டுகளாக தேவையற்ற சுமையை நாடு சுமந்தது. குற்றங்கள் அதிகரித்தன’ என்றார்.

* பாகிஸ்தான் முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், ‘இன்று (நேற்று) பாகிஸ்தானுக்கு சோகமான நாள்; கொள்ளையர்கள் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர். இம்ரான் கான் அவரது பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறினார். நான் ஒரு பாகிஸ்தான் பிரஜையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இம்ரான் கான் போன்ற ஒரு தலைவரைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்’ என்றார்.

Related Stories: