‘அரசியலமைப்பு சட்டம் அர்த்தமில்லாமல் போய் விட்டது’ சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளை ஆட்டிப்படைக்கும் ஆர்எஸ்எஸ்: ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ்.சின் கைகளில் உள்ளன. அதிகாரத்தை கைப்பற்ற அரசு அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன,’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். தலித்துகளின் போராட்டங்கள் மற்றும் அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை குறித்து எழுதப்பட்ட ‘தலித் உண்மை’ என்ற புத்தகத்தை டெல்லியில் நேற்று வெளியிட்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அரசியலமைப்பு என்பது இந்தியாவின் ஆயுதம். அரசியல் சட்டத்தை வடிவமைத்த சிற்பியான அம்பேத்கர், இந்த ஆயுதத்தை மக்களுக்கு வழங்கினார்.

ஆனால், இன்று அந்த ஆயுதத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் உள்ளது. காரணம், அரசு அமைப்புகள் இல்லாத அரசியலமைப்புக்கு அர்த்தமில்லை. நாம் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும். அரசு அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று பேசுகிறோம். ஆனால், அனைத்து அரசு அமைப்புகளும் ஆர்எஸ்எஸ் கைகளில் உள்ளன. அதிகாரத்தை கைப்பற்றவும், பிற வேலைகளுக்காகவும் அரசு அமைப்புகளை ஆர்எஸ்எஸ்.சும், பாஜ.வும் தவறாக பயன்படுத்துகின்றன. அரசு அமைப்புகள் மக்களால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் அது தேசத்திற்கு நல்லதல்ல. இது ஒன்றும் புதிய தாக்குதல் அல்ல. மகாத்மா காந்தி தோட்டாக்களால் கொல்லப்பட்ட நாளன்றே அது தொடங்கி விட்டது.

இதை எதிர்த்து மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அரசு அமைப்புகள் தொடர்ந்து சுயநலத்திற்காக பயன்படுத்தப்படும், கட்டுப்படுத்தப்படும், அரசியலமைப்பு முறையாக பின்பற்றப்படாது. அரசியலமைப்பு சட்டம் செயலிழந்தால், பலவீனமானவர்கள், தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர், வேலையற்றோர், விவசாயிகள், ஏழைகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நாட்டின் பொருளாதாரமும் இன்று இக்கட்டான நிலையில் உள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்க அம்பேத்கரும், மகாத்மா காந்தியும் காட்டிய பாதையில் மக்கள் நடக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

* மாயாவதி மீது தாக்கு

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி குறித்து ராகுல் பேசுகையில், ‘‘நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் போது, மாயாவதியுடன் கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்தோம். அவர் முதல்வராக இருக்கலாம் என தகவல் அனுப்பினோம். ஆனால், மாயாவதி எங்களிடம் பேசவே இல்லை. இந்த முறை அவர் தலித்களின் குரலாக தேர்தலில் எதிரொலிக்கவில்லை. உபியில் தலித்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ததற்காக கன்ஷிராம் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அதே சமயம், அவரால் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாயாவதி, ஆளும் பாஜவுக்கு தெளிவான பாதையை வகுத்துக் கொடுத்து விட்டார். இதற்கு, சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் பெகாசஸ் போன்றவையே காரணம்,’’ என்றார்.

Related Stories: