திருக்கனூர் அருகே காட்டுப்பன்றிகளிடம் இருந்து விளைநிலங்களை காக்க கூம்பு வடிவ ஒலிபெருக்கி-விவசாயிகள் புதிய முயற்சி

திருக்கனூர் : புதுச்சேரி அடுத்த திருக்கனூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கவர்னர் கிரண்பேடி அரசு விழா ஒன்றுக்கு வந்தபோது, விவசாயிகள் செட்டிப்பட்டு கிராமத்தில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் குறித்து புகார் கூறினர்.

உடனே கவர்னர், விவசாயத்துறை, வனத்துறை அதிகாரிகளிடம் காட்டுப்பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டார். அதிகாரிகள் இது சம்பந்தமாக இரவு நேரங்களிலும் இப்பகுதியில் வந்து காட்டு பன்றிகளின் நடமாட்டம் குறித்து விசாரித்து வந்தனர். ஆனால் பிடிப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் இல்லை.

நாளுக்கு நாள் காட்டுப் பன்றிகள் எண்ணிக்கை அதிகமானது. விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் காட்டு பன்றிகளின் அட்டகாசத்தை போக்க நிலங்களை சுற்றி பழைய புடவையால்  கட்டி ஆட்கள் இருப்பது போன்று செய்தனர். சில விவசாயிகள், நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்தனர். இதில் காட்டுப் பன்றிகள் மற்றும் பல்வேறு விலங்கினங்கள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சூழல் உருவானது. ஆகையால் மின் வேலி அமைப்பதை தவிர்த்தனர்.

இதனால் காட்டுப்பன்றிகள் மணிலா, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை நோண்டி நாசம் செய்கின்றன. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் புதுவிதமாக தங்களது நிலத்தின் நடுவே கூம்பு வடிவ ஒலிபெருக்கி வைத்து, அதில் அதிகம் பேர் பேசிக்கொண்டு இருப்பது போலவும், இரவு நேரங்களில் இதோ.. இதோ..புடி..புடி... இதோ... இதோ... என பதிவு செய்து. அந்த ஒலிபெருக்கியில் இரவு முழுவதும் ஒலிபரப்பு செய்து வருகின்றனர். இதனால் காட்டுப்பன்றிகள், ஆள் இருக்கிறார்கள் என்று அப்பகுதியை விட்டு வேறொரு பகுதிக்கு சென்று விடுகின்றன. தற்காலிகமாக இந்த முயற்சி பலனளித்தாலும், நீண்ட கால தீர்வை ஏற்படுத்த புதுச்சேரி அரசு உடனடியாக காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: