வருசநாடு அருகே சூறாவளிக்கு வாழை, முருங்கை நாசம்-விவசாயிகள் கவலை

வருசநாடு :‘ கடமலை-மயிலை ஒன்றியத்தில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு வாழை, முருங்கை மரங்கள் சாய்ந்து நாசமாகின. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் வாழை, முருங்கை, இலவம் மற்றும் கொட்டை முந்திரி ஆகியவை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழைக்கு தர்மராஜபுரம், வருசநாடு, குமணன்தொழு, அரண்மனைபுதூர்,  கோம்பைத்தொழு  தும்மக்குண்டு வாலிப்பாறை, மேல்வாலிப்பாறை, காமராஜபுரம்,  பசுமலைத்தேரி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட வாழை, முருங்கை மரங்கள் உள்ளிட்ட பல மரங்கள் சாய்ந்து நாசமாகின.

இதையடுத்து மயிலாடும்பாறை வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கடமலைக்குண்டு தோட்டக்கலைதுறை அதிகாரி பிரியதர்ஷன் மற்றும் வேளாண் அதிகாரிகள், சாகுபடி சேதம் குறித்து தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கலாம என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தர்மராஜபுரம் விவசாயி முருகன் கூறுகையில், ‘நேற்று முன்தினம் சூறாவளியுடன் பெய்த கனமழைக்கு வாழை, முருங்கை உள்ளிட்ட சாகுபடி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை காலங்களில் திடீரென மழையுடன் கூடிய சூறைக்காற்றால், அதிக அளவில் விவசாய பயிர்கள் சேதமடைகின்றன. எனவே, தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட வாழை, முருங்கை மற்றும் அனைத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.

Related Stories: