புளியங்குடி நகராட்சி பள்ளி கட்டிடம் சேதம் சமுதாய கூடத்திற்கு வகுப்பறைகள் இடமாற்றம்

புளியங்குடி : புளியங்குடி பஸ்நிலையம் அருகில் வேலாயுதம் தெருவில் அரசு நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 60மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். கொரோனா விடுமுறை காரணமாக பள்ளி அடைக்கப்பட்டதால் எலிகள் சுவர்களில் துளையிட்டுள்ளது. மேலும் தரையையும் சேதப்படுத்தியதால் வகுப்பறைகள் முழுவதும் மண் நிறைந்தும் காணப்பட்டது.

இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்குள் வருவதால் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் வெளியே வராண்டாவில் ஒரேஇடத்தில் வைத்து பாடம் நடத்தி வந்தனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மாணவர்கள் படிப்பது குறித்த விரிவான செய்தி தினகரனில் 6ம்தேதி வெளியானது.

யஉடனடியாக பள்ளியை ஆய்வு செய்த நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், கமிஷனர் குமார்சிங் ஆகியோர் புதிதாக கட்டப்பட்ட அருகிலுள்ள சமுதாயக்கூடத்தில் பள்ளி மாணவர்கள் தற்காலிகமாக படிக்க ஏற்பாடு செய்து கொடுத்தனர். மேலும் சேதமடைந்த பள்ளி வகுப்பறைகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதுபோல் புளியங்குடியில் உள்ள அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் உடனடியாக ஆய்வு செய்து அடிப்படை வசதிகளில் குறைகள் இருப்பின் சரி செய்யுமாறு தெரிவித்தனர்.

மாணவர்களின் நலன்கருதி உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், நகராட்சி கமிஷனர் குமார்சிங், தினகரன் நாளிதழுக்கும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: