63 கோயில்களுக்கு ஆகம விதிப்படி திருப்பணிகள் செய்ய பரிசீலனை: வல்லுநர் குழு கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் 63 கோயில்களில் ஆகம விதிப்படி திருப்பணிகள் செய்ய மாநில அளவில் வல்லுநர் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து புனரமைப்பு பணிக்கான ஒப்புதலுக்கு பரிந்துரை செய்வதற்கு மாநில அளவிலான வல்லுநர் குழுவின் 22வது கூட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், திருப்பணி இணை ஆணையர் அர.சுதர்சன், ஆகம வல்லுநர் குழு உறுப்பினர் கே.சந்திரசேகர் பட்டர் (ராஜா), கோவிந்தராஜ பட்டர், அனந்த சமய பட்டாச்சாரியார், தலைமை பொறியாளர் தட்சிணாமூர்த்தி, தலைமை பொறியாளர் (ஓய்வு) முதுநிலை ஆலோசகர் கே.முத்துசாமி, தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கே.மூர்த்திஸ்வரி, சீ.வசந்தி, சத்தியமூர்த்தி, கே.ராமமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் எந்தவித திருப்பணிகளும் நடைபெறவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடந்து வந்த மாநில வல்லுநர் குழு கூட்டம் திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து வாரம் இரண்டு முறை நடத்தப்படுகிறது.

சுமார் 120க்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த கோயில்களில் திருப்பணி செய்ய அவற்றின் பழமை மாறாது புனரமைத்தல், புதுப்பித்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டல அளவிலான வல்லுநர் குழு மற்றும் மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதனை தொடர்ந்து, கோயில் திருப்பணி செய்ய மாநில அளவில் வல்லுநர் குழுவால் பரிசீலனை செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை, தம்பிரான் திருக்கோயில், ஒட்டப்பிடாரம் விஸ்வநாதசுவாமி திருக்கோயில், ஈரோடு, சத்தியமங்கலம் பத்ரகாளியம்மன் திருக்கோயில், விருதுநகர் ஆண்டாள் திருக்கோயில், சென்னை, பெரியமேடு வரசித்தி விநாயகர் திருக்கோயில், பெரியமேடு கோதண்டராமர் திருக்கோயில் உட்பட 63 திருக்கோயில்களுக்கு ஆகம விதிபடி திருப்பணிகள் செய்ய பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிசீலனைக்கு பின்னர் அனுமதி வழங்கப்பட்டு திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். திருப்பணிகள் முடிவுற்றவுடன் திருக்குடமுழுக்கு நடத்தப்படும்.

Related Stories: