மரக்காணம் அருகே பரபரப்பு தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 லாரி, மினி டெம்போ கருகியது ₹65 லட்சம் நாசம்

மரக்காணம்: மரக்காணம் அருகே தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.65 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மரக்காணம் அருகே மண்டவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). இவர் வீட்டின் அருகில் தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையை கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் தினமும் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிற்சாலையின் அருகில் இருந்த மின்மாற்றியில் இருந்து தீ பொறிகள் கொட்டியுள்ளது. இதன்காரணமாக மின்மாற்றியின் அருகில் இருந்த தேங்காய் நார் பஞ்சுகள் தீப்பற்றி எர்ந்துள்ளது. அப்போது காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென்று அருகில் இருந்த பஞ்சி குவியலில் பரவியுள்ளது.

இதனைத்தொடர்ந்து தீ அருகில் இருந்த 2 லாரிகள், 1 மினிடெம்போ, 3 பஞ்சு உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் மற்றும் தேங்காய் மட்டைகள், பஞ்சுள் உள்பட அங்கிருந்த அனைத்து பொருட்களுக்கும் பரவி தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப்பார்த்த அங்கிருந்தவர்கள் உடனே மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்தும் இந்த தீ விபத்தினால் ரூ. 65 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து குறித்து மரக்காணம் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு தீ விபத்துக்கான உண்மை காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேங்காய் நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: