உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா: 19ம் தேதி திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இந்த கோயில் சித்திரை பெருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தாண்டு சிறப்பாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூத்தாண்டவர் கோயில் 18 நாள் சித்திரை பெருவிழா நேற்று மாலை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

கூவாகம், நத்தம், சிவிலியங்குளம், வேலூர், பந்தலடி மற்றும் சுற்றியுள்ள 7 கிராமங்களில் இருந்து, விரதம் இருந்து பக்தர்கள் வாணவேடிக்கையுடன், கொண்டு வந்த கூழ் கூத்தாண்டவர் கோயில் அருகில் உள்ள அம்மன் கோயில் முன்பு வைத்து தேங்காய் உடைத்து படையலிடப்பட்டது. எம்எல்ஏ மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். இதனை தொடர்ந்து இன்று முதல் தினந்தோறும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முக்கிய திருவிழாவான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி மற்றும் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி வரும் 19ம்தேதி மாலை நடைபெற உள்ளது.

அன்றுதான் தமிழகம் மட்டுமின்றி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கோயிலுக்கு வந்து கோயில் பூசாரியிடம் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அன்று இரவு முழுவதும் தாலி கட்டிய திருநங்கைகள் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். 20ம்தேதி காலை சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. பின்னர் பந்தலடியில் அரவான் களப்பலிக்கு பிறகு திருநங்கைகள் பூசாரி கையினால் கட்டிய தாலியை அறுத்து வெள்ளை புடவை உடுத்தி சோகத்துடன் சொந்த ஊருக்கு திரும்புவது வழக்கம்.

அன்று மாலி பலிச்சோறு படையலிடப்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாத புதுமண பெண்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள். இதனை தொடர்ந்து 21ம் தேதி விடையாத்தியும், 22ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர், கோயில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: