சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் உலகிலேயே மிக உயரமான 146 அடி முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் அடுத்த புத்தரகவுண்டன்பாளையத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்துமலை அடிவாரத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக இந்த பிரமாண்ட முருகன் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வந்தது. நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த முருகன் சிலைக்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன் என்பவர் இந்த கோயிலை கட்ட ஆரம்பித்து, அவருடைய மகன் தரால் தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் உள்ள 140 அடி உயரம் கொண்ட முருகன் சிலை தான் இதுவரை உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என பிரசித்தி பெற்று வந்தது. இந்த நிலையில் மலேசியாவில் உள்ள கோயிலை வடிவமைத்த ஸ்தபதி திருவாரூர் தியாகராஜன் தலைமையிலான குழுவினர், சேலம் புத்திரக்கவுண்டம்பளையத்தில் உள்ள இந்த முத்துமலைமுருகன் சிலையை வடிவமைத்து உள்ளனர். 146 அடி கொண்ட இந்த முருகன் சிலை தான் தற்போது உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது.

மலேசியாவில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோயிலுக்கு  முத்து நடராஜன் சென்று வந்த நிலையில்,

அதேபோல மிக உயரமான முருகன் சிலையை சேலத்தில் நிறுவ வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள தனது சொந்த நிலத்தில் இந்த கோயிலை மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்க நினைத்து, கட்ட ஆரம்பித்தார். அதன்படி  தற்போது கோயிலை கட்டி முடித்ததை தொடர்ந்து இன்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதற்காக கோயில் வளாகத்தில் கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்து வந்தது. தொடர்ந்து இன்று காலை 4ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் சிலைக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

விழாவில் நாமக்கல், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஏத்தாப்பூர் பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Related Stories: