6 காதலிகள்; 3 திருமணங்கள்.! தீராத விளையாட்டு பிள்ளை; ஜாலிகோ ஜிம்கானா இம்ரான்...

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு, 1952ம் ஆண்டில் மேல் நடுத்தர வகுப்பை சேர்ந்த குடும்பத்தில், 4 சகோதரிகளுடன் பிறந்தவர் இம்ரான் கான். இவரது பிறப்பு தேதி எதுவென்று இன்னும் சரியாக தெரியவில்லை. நியாசி பழங்குடியினத்தில் பஷ்டூன் இனத்தை சேர்ந்த இக்ரமுல்லா கான் நியாசிக்கும், புர்கி பழங்குடியினத்தில் பஷ்டூன் இனத்தை சேர்ந்த சவுகத் கானும்க்கும் ஒரே மகனாக லாகூரில் பிறந்தார். இவரது தந்தை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை தீவிரமாக எதிர்த்தவர். சுதந்திரத்துக்கு பிறகு பாகிஸ்தான் அரசின் பொதுப்பணித் துறையில் சேர்ந்தார். தனது சொத்துக்களை கொண்டு நாடு முழுவதும் தொண்டு நிறுவனங்களை தொடங்கினார். இம்ரான் கானின் தாய் சவுகத் கானும் இந்தியாவில் ஜலந்தர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது குடும்பத்தில் பலர் கிரிக்கெட் விளையாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள். பின்னர், லாகூருக்கு புலம் பெயர்ந்தார். இம்ரான் கானின் மூத்த சகோதரி ருபினா கானும் முன்னாள் ஐநா அதிகாரி, 2வது சகோதரி அலீமா கானும் தொழிலதிபர், 3வது சகோதரி உஸ்மா கானும் அறுவை சிகிச்சை மருத்துவர். கடைசி சகோதரி ராணி கானும் சமூக ஆர்வலர். இதனால், இம்ரான் கான் சகோதரிகளுடன் வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் வாழ்ந்து வந்தார்.

அவரது வாழ்க்கை ஒரு கந்தலான கதை அல்ல; மாறாக, ஆடம்பரங்களும், அதீத வாய்ப்புகளையும் கொண்டது. இவர் தனது வாழ்க்கையின் முதல் 17 வருடங்களை லாகூரில் 1868ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டுள்ள அட்சிசன் கல்லூரியில் செலவழித்தார். அதன் பின்பு, இங்கிலாந்தின் வொர்செஸ்டரில் உள்ள தி ராயல் கிராமர் ஸ்கூலில் பயின்றார். இறுதியாக, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கேபிள் கல்லூரியில் தத்துவவியல், அரசியல் மற்றும் பொருளாதாரம் கற்றார். இங்கிலாந்தில் படிக்கும்போது தான் இம்ரான் கானின் கிரிக்கெட் திறமை வெளி உலகிற்கு தெரிய வந்தது. அப்போது 1971-76 கால கட்டங்களில் வொர்செஸ்டர்ஷையர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பிற்காகவும்,  அதே நேரம், 1973-75 கால கட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் புளூஸ் கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடினார். அதற்கு பின்பு, 1976ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய இம்ரான் கான், தேசிய அணிக்காக விளையாட தேர்வானார்.

கிரிக்கெட் திறமை இருந்ததால் அவர் தேர்வானார். இருந்த போதிலும், அவரது தாய் மாமாவின் மகன்கள் மாஜித் கான், ஜாவித் புர்கி இருவரும் அதே அணியில் கேப்டன்களாக இருந்ததால், இம்ரான் கான் தேர்வாக அவர்கள் உதவியதாக கூறப்படுகிறது. ஆனால், இம்ரான் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஆனதும், முதல் வேலையாக மாஜித் கானை அணியில் இருந்து தூக்கினார். இதனால், அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தார்கள். இந்த விஷயம் கூட, இம்ரான் கான் அரசியல் கட்சி தொடங்கிய பிறகே தெரிய வந்தது. 1970களின் இறுதியில் இம்ரான் கான் கிரிக்கெட் விளையாட்டில் ஆல் ரவுண்டர், ரிவர்ஸ் டெக்னிக் பவுலிங் என பந்து வீச்சில் அசைக்க முடியாத ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உலக அளவில் வலம் வர தொடங்கினார். இம்ரான் கான் ஒரு முஸ்லிம் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், இங்கிலாந்து, லாகூரில் நவீன மயமான வாழ்க்கை நடத்தி வந்தார். மேற்கத்திய பத்திரிகைகள் அவரை `உயர்குடியில் பிறந்த தீராத விளையாட்டு பிள்ளை’ என்று குறிப்பிடுவதுண்டு. இங்கிலாந்தின் மாடல் அழகிகளை விரட்டி பிடித்து தனது படுக்கைக்கு கொண்டு வரும் கலை அவரது கைவசம் இருந்தது. இதனால், இங்கிலாந்தின் பல மாடல் அழகிகள் இவரது வலையில் விழுந்தனர்.

1980களில் இவரது காதல் வலையில் சிக்காத பிரபலங்களே இல்லை என கூறலாம். அவர்களுடன் உறவு கொண்டதாக பலமுறை அவரே கூறியிருக்கிறார். அப்படி அவருடன் பழகிய 6 காதலிகளில் ஒருவரான சீட்டா வொய்ட், தனக்கு இம்ரான் கான் மூலம் ஒரு குழந்தை இருப்பதாக கூறினார். திருமணம் செய்யாமல் வாழ்ந்த இவர், 1997ம் ஆண்டில் தொடர்ந்த வழக்கில், இம்ரான் கான் தான் தனது பெண் குழந்தையின் தந்தை என்று கூறினார். ஆனால், கலிபோர்னியா நீதிமன்றம் இம்ரான் கானுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இருப்பினும், பல ஆண்டுகளுக்கு பிறகு, இம்ரான் கான் அக்குழந்தையை தத்தெடுத்து கொள்வதாக கூறினார். இம்ரான் கானின் மகன்களுடன் அப்பெண் குழந்தை இருப்பது போன்ற படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இப்படி தனது வாழ்க்கையின் முதல் 42 ஆண்டுகளை கழித்த இம்ரான் கான், அடுத்த 25 ஆண்டுகளில் 3 முறை திருமணம் செய்து கொண்டார். முதலாவதாக, 21 வயது நிரம்பிய ஜெமிமா கோல்ட் ஸ்மித்தை திருமணம் செய்து கொண்டு அவருடன் 1995-2004 வரை வாழ்ந்தார்.

பாகிஸ்தானில் வாழ பிடிக்காமல் அவர் 2004ம் ஆண்டு இம்ரான் கானை விவகாரத்து செய்தார். இரண்டாவதாக, இங்கிலாந்தில் வசித்த பாகிஸ்தான் வம்சாவளியினரான பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ரிகாம் கானை 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் புரிந்தார். அதே ஆண்டு, அக்டோபர் மாதம் விவாகரத்து பெற்று விட்டார். இம்ரான் கானின் பொறுப்பற்ற தன்மை, ஆணாதிக்க மனோபாவத்தால் விவாகரத்து பெற்றதாக ரிகாம் கூறினார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்பதற்கு 4 மாதங்கள் முன்பாக, 3வதாக புஷ்ரா பீபியை கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். சுபி நம்பிக்கையினால் குணப்படுத்துதல், ஆன்மிக வழிகாட்டி என இவரது பல்வேறு திறமையினால் ஈர்க்கப்பட்டு இம்ரான் கான் அவரை திருமணம் செய்து கொண்டார். இன்று வரை அவருடன் குடும்பம் நடத்துகிறார். கிரிக்கெட்டில் இம்ரான் கான் புகழ் பெற்றவராகவும் ஒரு வலிமையான வீரராகவும், ஆல்ரவுண்டராகவும் இருந்தார். 1992ம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான் பெற அவரே முழு காரணமாக இருந்தார்.

அவரது காலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொற்காலம். இவ்வளவு நல்ல பெயர் இருந்த போதிலும், கிரிக்கெட்டிலும் அவர் ஒரு ஏமாற்று வித்தைக்காரராகவே இருந்தார். கிரிக்கெட்டில் பந்தை சேதப்படுத்துவது என்பது சாதாரணமானது. இப்போது போல் அப்போது அது ஒன்றும் பாவமில்லை என்று 1994ம் ஆண்டில் அவர் அளித்த பல பேட்டிகளில் அடிக்கடி கூறியதுண்டு. 1992 உலக கோப்பை வெற்றிக்காக அவருக்கு கிடைத்த பரிசுத்தொகையான 90,000 யூரோக்களை கொண்டு அவருடைய தாய் சவுகத் கானும் பெயரில் லாகூரில் புற்றுநோய்  மருத்துவமனை கட்டினார். இன்றளவும் அதுவே பாகிஸ்தானில் மிகப் பெரிய புற்றுநோய் மருத்துவமனையாக உள்ளது. இதற்காக பாகிஸ்தான் மக்கள், சர்வதேச நன்கொடையாளர்களிடம் இருந்து பெரும் தொகை பெறப்பட்டது. இவற்றை அவர் தனிப்பட்ட முறையில் தான் சேர்த்த சொத்து என கூறி, அவற்றை பிரான்ஸ், ஒமனில் முதலீடு செய்ததாகவும் விமர்சனம் எழுந்தது.

ஆனால், இம்ரானுக்கு 3 தலைமுறைக்கு தேவையான சொத்து அவரது தந்தையிடம் இருந்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இம்ரான் கான் 1996ல் அரசியல் பிரவேசம் செய்தார். பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். ஒழுக்கமான முஸ்லிமாக தாடி வளர்த்து கொள்ளாவிட்டாலும் தனது பிளேபாய், ஆடம்பர இமேஜ்களை உடைத்தெறிந்து, முழு ஆன்மிக வாதியாக, முஸ்லிமாக, ஏழ்மையை ஒழிப்பவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். பொது கூட்டங்களில் ஜெபமாலை கூட சொல்ல தொடங்கினார். அவரது அரசியல் வாழ்க்கையும் முரண்பட்டிருந்தது. தாராளமயமாக்கலை ஆதரித்த அதே நேரத்தில், முஸ்லிம் மத குருக்களிடம் அதற்காக மன்னிப்பு கேட்கவும் செய்தார். முஸ்லிம் தீவிரவாதத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே வேளையில், பாகிஸ்தானில் தலிபான் அமைப்பினருக்கு நிதி உதவி அளித்தார். பாகிஸ்தானின் மத அவதூறு சட்டங்கள் மீது குற்றம் சாட்டினார்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக உறுதி அளித்த இம்ரான் கான், 1999ல் பர்வேஸ் முஷாரப்புக்கு உதவினார். 2018, ஆகஸ்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவியை ஏற்றார். மொத்தத்தில் இம்ரான் கான் அனைத்து துறையிலும் உறுதியுடன் கூறிய பொய்களின் அடிப்படையில் அவற்றை உற்று கவனித்து, கண்காணித்து வரும் விமர்சகர்கள் அவருக்கு சிறந்த டெவில்ஸ் அவார்டு கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். அவர் தர்ணா, ஊழல், வாரிசு அரசியலுக்கு எதிரான அரசியலை கையிலெடுத்தார். அதனால், வெற்றி பெற முடிந்தது. ஆனால் அந்த வெற்றி பாகிஸ்தான் ராணுவத்தினரால் திட்டமிடப்பட்ட ஒன்று. அவர்களே இம்ரான் கானை ஆட்சியில் அமர்த்தினர்.

இம்ரான் நம்பிக்கைக்குரிய மக்கள் தலைவராக இருப்பார் என்று ராணுவம் எண்ணியது. ஆனால், இம்ரான் கான் ஒவ்வொரு விஷயத்திலும் ராணுவத்துக்கு எதிராக செயல்பட்டார். ராணுவ கொள்கைகளை தரக்குறைவாக மதிப்பிட்டார். எனவே பாகிஸ்தான் பொருளாதாரமோ, விமர்சகர்கள் கூறுவது போல ஜனநாயகமோ அல்ல. ராணுவத்துடனான போரே அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது. ராணுவ ஜெனரல்கள் கூறுவதை கேட்காத அவரது மனப்போக்கே இதற்கு காரணம். ராணுவத்துடனான இந்த போராட்டத்தில் இம்ரான் கான் வெற்றி பெறப் போவதில்லை. இந்த போராட்டத்தின் உண்மையான தோல்வியாளர்கள் பாகிஸ்தான் மக்களே. பாகிஸ்தானின் 75 ஆண்டு கால வரலாற்றில் ஒரு பிரதமர் கூட தங்களது முழுமையான 5 ஆண்டு ஆட்சி காலத்தை நிறைவு செய்யவில்லை. 75 ஆண்டுகளில் ஒரு முறை கூட நிலையான அரசு அமையவில்லை. பாகிஸ்தானில் மாற்றம் என்பது கூட தவிர்க்க முடியாதது அல்ல என்றாகி விட்டது.

Related Stories: