மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்; 14ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம்: 2 ஆண்டுக்கு பின் பக்தர்கள் பங்கேற்பு

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்கும் வகையில், நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. வரும் 14ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப். 16ல் வைகை ஆற்றில் அழகர் இறங்குகிறார். உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை துவங்கியது. கோயில் பட்டர் காலை 10.35 மணிக்கு கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். பின்னர் கொடி மரத்திற்கு பூ மாலை சூட்டி, மலர்கள் தூவி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் எதிரொலியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று நடந்த கொடியேற்றத்தில் பக்தர்கள் பங்கேற்று அம்மன், சுந்தரேஸ்வரர் சுவாமியை வழிபட்டனர். கொடியேற்ற வைபவத்தை முன்னிட்டு நேற்றிரவு  7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் சிம்ம வாகனத்திலும், மீனாட்சியம்மன் கற்பக விருட்சக வாகனத்திலும் மாசி வீதிகளில் உலா வந்தனர். வரும் 14ம் தேதி காலை 10.35 மணிக்கு மேல் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது.

ஏப். 15ம் தேதி மாசி வீதிகளில் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 16ம் தேதி கோயில் தெப்பத்தில் தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதேபோல், சித்திரை திருவிழாவின் தொடர் முக்கிய நிகழ்வான அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஏப். 16ல் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று எதிரொலியாக வைகை ஆற்றில் நடக்காமல், அழகர் கோயில் வளாகத்திற்குள் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான விழா அழகர்கோயிலில் வரும் 12ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: