10 ஆண்டுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டம் கொழுவாரியில் சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்

வானூர்: வானூர் அருகே கொழுவாரியில் 10 ஆண்டுக்கு பிறகு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ரூ.42.50 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கொழுவாரியில் பெரியார் நினைவு சமத்துவபுரம், 100 வீடுகள் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் ரூ.2 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக காலத்தில் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் கூடுதலாக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவபுரத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். பின்னர் பெரியார் சிலையை திறந்து  வைத்து, நூலகம் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல்  நாட்டினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து விளையாட்டை துவக்கி வைத்து வீரர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாயையும் ஆய்வு செய்தார். வீடுகளின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் வானூர் தாலுகா ஒழிந்தியாப்பட்டு கிராமத்தில் ரூ.42.50 கோடி மதிப்பில் 10,722 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பேசுகையில், மும்பை, கொல்கத்தாவில் மட்டும் இந்தியா இல்லை. கிராமங்களில் தான் இருக்கிறது. கிராமங்கள் வளர்ந்தால்தான் மாநிலம் வளரும். மாநிலம் வளர்ந்தால்தான் நாடு வளம் பெறும். எனவே மாநிலங்கள் வளரவேண்டும். இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும். சாதியும், மதமும்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என தெரிவித்தார்.

திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் கிராமத்தில் புதிதாக சிப்காட் தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.500 கோடி மதிப்பீட்டில் செய்யார் செஸ் டெவலப்மென்ட் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன், மஸ்தான், ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ்,  செயலாளர் பிரவின் நாயர், மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம்  எம்எல்ஏ லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* சாலைகளில் நின்று

வரவேற்ற பொதுமக்கள்

புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இசிஆர் சாலை வழியாக கொழுவாரிக்கு சென்று சமத்துவபுத்தை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ஒழிந்தியாப்பட்டு கிராமத்துக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் புதுவையில் இருந்து வழிநெடுக சாலைகளின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் திமுகவினர் திரண்டு நின்று வரவேற்றனர்.

* நெகிழ்ந்த நரிக்குறவர்கள்

நரிக்குறவர், இருளர் சமூகத்துக்கு இலவச மனைப்பட்டா, சாதி சான்றிதழ், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் நேற்றைய விழாவில் வழங்கப்பட்டன. மேடைக்கு வந்த நரிக்குறவர் இலவச மனைப்பட்டாவுக்கான ஆணையை மு.க.ஸ்டாலினிடம் பெற்றுக்கொண்டு, அவரது கையை பிடித்து கண்ணில் ஒத்திக்கொண்டார். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடம் சென்று அவர்களிடம் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவர்களுக்கான மூன்று சக்கர மோட்டார் சைக்கிளையும் வழங்கினார். விழுப்புரம் நகராட்சி அலுவலகம், விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலம் என 38 அரசு கட்டிடங்களை காணொலி காட்சியின் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: