நீலகிரி மாவட்டத்தில் பெட்ரோல் ரூ.111.16, டீசல் ரூ.100க்கு விற்பனை

ஊட்டி :  தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் உச்ச கட்டமாக நேற்று பெட்ரோல் ரூ.111.16க்கும், டீசல் ரூ.100.90க்கும் விற்பனையானது. இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 21ம் தேதி வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.103.62க்கும், டீசல் ரூ.93.32க்கும் விற்பனையாகி வந்தது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை உயர்ந்துள்ளதாக கூறி 137 நாட்களுக்கு பின் 22ம் தேதி எண்ணைய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. 11வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் டீசல் விலை சதமடித்து ரூ.100.14 ஆக இருந்த நிலையில், நேற்று 76 பைசா உயர்த்தப்பட்டு ரூ.100.90 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை ரூ.110.40 ஆக இருந்த நிலையில், அதுவும் 76 பைசா அதிகரித்து ரூ.111.16 ஆக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் சதமடித்துள்ள நிலையில், தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

நீலகிரி மலை மாவட்டம் என்பதால் இங்கு இரு சக்கர வாகனமானாலும் சரி, கார், ஜீப் மற்றும் கனரக வாகனங்கள் என்றாலும் சமவெளி பகுதிகளை காட்டிலும் மைலேஜ் என்பது குறைவாகவே கிடைக்கும். இந்த சூழலில் நாள்தோறும் எரிபொருள் விலை உயர்ந்து வருவதால், வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்பவர்கள், இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வேலைக்கு சென்று வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். வாடகை வாகன ஓட்டுநர்கள், லாரிகள் போன்றவற்றில் வேறுவழியின்றி வாடகை கட்டணம் உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையான உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: