சண்டிகருக்கு உரிமை கோரி பஞ்சாப் அரசுக்கு போட்டியாக அரியானாவும் பேரவை கூட்டம்: தலைநகர பிரச்னை பெரிதாகிறது

சண்டிகர்: சண்டிகரை தங்கள் மாநிலத்துடன் இணைக்கக்கோரி பஞ்சாப் சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு போட்டியாக, அரியானாவும் ஒரு நாள் சிறப்பு சட்டபேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. பஞ்சாப்பில் இருந்து அரியானா பிரிக்கப்பட்ட போது, இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக சண்டிகர் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, யூனியன் பிரதேசமான சண்டிகரை பஞ்சாப் 60 சதவீத ஊழியர்களை நியமித்தும், அரியானா 40 சதவீத ஊழியர்களை நியமித்தும் நிர்வகித்து வருகின்றன. ஆனால் தற்போது சண்டிகரை நிர்வகிக்க வேறு மாநில அதிகாரிகளை அதிகளவில் நியமிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது முந்தைய புரிந்துணர்வுக்கு எதிரானது என்பதால் சண்டிகரை முழுமையாக பஞ்சாப்பிற்கு மாற்ற வேண்டும் என பஞ்சாப் சட்டபேரவையில் மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பகவந்த் சிங் மான் சில தினங்களுக்கு முன் தீர்மானம் கொண்டு வந்தார். பாஜ தவிர அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒருமனதாக  நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க, நாளை அரியானா சட்டபேரவையின் ஒரு நாள் சிறப்பு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப்புக்கு போட்டியாக அரியானா மாநில பாஜ அரசும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: