திருவொற்றியூரில் போராட்டம்: மயங்கி விழுந்தார் சீமான்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் சுரங்க பணிக்காக கடைகள், வீடுகளை இடிக்க ரயில்வே துறை திட்டமிட்டிருந்தது. இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று காலையில் தனியார் வீடுகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற ரயில்வே துறை அதிகாரிகள் வந்தனர். பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, ‘வீடுகளை அப்புறப்படுத்துவதற்கு முன்பு அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்பட வேண்டும்’ என்று சீமான் கூறினார். இதைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு சீமான் பேட்டி அளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே கட்சி தொண்டர்கள் அவரை மீட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: