தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் தருவதுபோல் எந்த ஒரு அரசியல் தலைவரும் கொடுத்ததில்லை : பெரம்பூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

பெரம்பூர்: தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் தருவதுபோல் எந்த ஒரு அரசியல் தலைவரும் கொடுத்ததில்லை என பெரம்பூரில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள மான்ஃபோர்ட் பள்ளியில் மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாளை முன்னிட்டு, ‘‘படித்தால் தலைமுறைகள் வளரும், படிக்க உதவுவோம், பலர் வாழ்வு மலரும்” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் வடக்கு பகுதி 71வது வட்டம் சார்பில், கவுன்சிலர் புனிதவதி எத்திராஜ் ஏற்பாட்டில் 200 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்களை வழங்கினர். முன்னதாக, பகுதி செயலாளர் மறைந்த வீராவின் குழந்தைகள் படிப்பு செலவிற்காக ₹50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினர்.

இதில், சென்னை மேயர் பிரியா, திருவிக நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, நடிகர் ஸ்ரீமன், சென்னை மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் ஜெயின் மற்றம் கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் இதுவரை 300க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. இன்று 70வது நிகழ்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்விக்கு முதல்வர் மிகப்பெரிய முக்கியத்துவம் வழங்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே” என்றார்.

நடிகர் ஸ்ரீமன் பேசுகையில், ‘‘கல்விக்காக நன்கொடைகள் வழங்கிய பெருமை இந்த மேடையை சேரும். முதல்வர் தந்தையாக இருந்து சிந்தித்த ஒரே காரணத்தினால் தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை அளித்துள்ளார். துபாய் உயர்ந்த கோபுரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றாலும் நமது கொடியும் ஏறியுள்ளது. இது முதல்வரின் கடின உழைப்பை காட்டுகிறது” என்றார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “ஆரஞ்சு மிட்டாய் வாங்கி கொடுத்து சுதந்திரக்கொடியை ஏற்றியவர்கள் பலர் உள்ளனர்.

தொழிலதிபர்கள் பலவற்றை செய்வதாக பொய்யுரைக்கும் வேளையில், கல்வி ஊக்கத்தொகையை மாணவ, மாணவிகளுக்கு வழங்கியிருப்பது பெருமைக்குரிய விஷயம். கடந்த நிதி அறிக்கையின்போது முதலமைச்சர் கல்விக்காக ₹42,355 கோடி ஒதுக்கீடு செய்தார். அது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் அரசுப்பள்ளிகள் புதிதாக வர உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். முதலமைச்சர் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதை அறிவிப்புகள் உணர்த்துகிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொண்டுவந்தார். ₹125 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாடல் ஸ்கூல் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். தமிழக முதல்வர் கல்விக்கு முக்கியத்துவம் தருவதுபோல் எந்த ஒரு அரசியல் தலைவரும் இதுவரை கொடுத்ததில்லை” என்றார். முன்னதாக, சென்னை மாமன்ற உறுப்பினர் புனிதவல்லி எத்திராஜ் அலுவலகத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். சென்னை மேயர் பிரியா, திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: