மினி கூவமாக மாறி வரும் பழநி வையாபுரி குளம்-தமிழக அரசு காப்பாற்ற கோரிக்கை

பழநி : பழநி வையாபுரி குளம் மினி கூவமாக மாறி வருவதை தடுத்து காப்பாற்ற தமிழக அரசு முன் வரவேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயில் உள்ள பழநி நகரின் மையப்பகுதியில் வையாபுரி குளம் உள்ளது. இக்குளத்திற்கு வரதமாநதி அணையில் இருந்து நீர்ப்பாசனம் கிடைக்கிறது. சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்கள் இக்குளத்தின் மூலம் நீர்பாசனம் பெறுகின்றன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் நீராடி செல்லும் புனித குளமாக இருந்த வையாபுரி குளம் தற்போது சாக்கடைகள் கலந்து மினிகூவமாக மாறி உள்ளது.

பழநி நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வையாபுரி குளத்தில் கலப்பதே இதற்கு காரணமாகும். எனவே, சாக்கடை கலப்பதை தடுக்க பழநி நருக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் 2011 காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசு பழநி நகருக்கு பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்தது. ஆனால், அதன்பின் வந்த அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல்வேறு காரணங்களை கூறி இருந்த போது பழநி நகருக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றவில்லை. தற்போது வையாபுரி குளத்தில் சாக்கடை நீர் கலந்து வருகிறது.

இதனால் வையாபுரி குளப்பகுதியில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. குளத்தின் கிழக்குப்பகுதி தண்ணீர் சேகரிக்க முடியாத அளவிற்கு சாக்கடை சதுப்பு நிலமாக மாறிவிட்டது. எனவே, புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு பழநி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரி குளத்தை காப்பாற்றும் வகையில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் கூறியதாவது,திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற 200 நாட்களுக்குள் பழநி மக்களின் 48 ஆண்டுகால கோரிக்கையான சித்த மருத்துவ கல்லூரிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பூர்வாங்கப்பணி துவங்கி உள்ளது. அதுபோல் பழநி நகரின் பாதாள சாக்கடை திட்டமும் விரைவில் தமிழக முதல்வரால் நிச்சயம் அறிவிக்கப்படும். இதற்காக உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. வையாபுரி குளமும் சீரமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Related Stories: