பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதியரசர்கள் நாகேஸ்வரராவ்,  கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து பல சாதகமான அம்சங்கள் உள்ளன. வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இட ஒதுக்கீடு வழங்க முடியாதவாறு  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகள், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன.

உயர்நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள்  இல்லாத சூழலில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என்ற ஒரு காரணத்தை தவிர மீதமுள்ள 6 காரணங்களை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி பரிந்துரைத்து வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை மற்றும் கடிதத்தில் சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி தான் வன்னியர்கள் இட ஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு நினைத்தால், தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பெற்று, புதிதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பது தான் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பொருள் ஆகும்.

அந்த வகையில் இது சாதகமானதே. உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சாதிகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, ஒரு சாதிக்கு மட்டும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம், வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தேவையில்லை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தத் தேவையில்லை,  வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு  வழங்க முடியும். தமிழக அரசு அதை நிச்சயம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால், தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் எவ்வளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழல் தெளிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின்  உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: