பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங். எம்பிக்கள் தர்ணா: மக்களவையில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்களைவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி வெளிநடப்பு செய்தனர்.

உத்தரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் காரணமாக 137 நாட்கள் உயராமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, தேர்தல் முடிவு வெளியான சில நாட்களுக்கு பின் முதல் முறையாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த 10 நாட்களில் 9வது முறையாக விலை உயர்ந்துள்ளது.

கடந்த பத்து நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.6.40 உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுபடுத்தாத ஒன்றிய அரசுக்கு எதிர்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் நேற்று நாடு முழுவதும் போராட்டமும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று மக்களவை தொடங்கியதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிதும், விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அப்போது பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா, ‘இந்த கூட்டத்தொடரில் ஏற்கனவே நான்கு முறை பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. எனவே உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்று அமருங்கள்’ என்று வலியுறுத்தினார். ஆனால் எதிர்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பிக்கள் பங்கேற்றனர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உட்பட எதிர்கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனை தொடர்ந்து, ராகுல் தலைமையில் காங்கிரஸ் எம்பிக்கள் விஜய் சதுக்கத்தில் அமர்ந்து, கையில் ஒன்றிய எதிராக கோஷங்களை எழுதிய பதாகைகள் ஏந்தியபடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்திற்கு மாலை போட்டு ராகுல் காந்தி தனது எதிர்ப்பை தெரிவித்தார். இந்த போராட்டத்தில் மக்களவை எதிர்கட்சி தலைவர் அதிர் ரஞ்சல் சவுத்ரி, மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட இரு அவைகளை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து ராகுல்காந்தி கூறுகையில்,  ‘பெட்ரோல், டீசல் விலை மிக விரைவாக அதிகரித்து வருவதால், சமானியர்கள் தான் மிகுந்த சிரமம் அடைகின்றனர்’ என்றார்.

Related Stories: