திருமணமாகாத பெண்கள் பெற்றோரிடம் செலவு பணத்தை கேட்க உரிமை உண்டு: சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ராய்ப்பூர்: ‘திருமணம் ஆகாத பெண்கள்  பெற்றோரிடம் இருந்து திருமண செலவுக்கு பணம் கோருவதற்கான உரிமை உள்ளது’ என்று சட்டீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தை  சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர், கடந்த 2015ம் ஆண்டு துர்க்கில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘எனது தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறும்போது பணிக்கொடை, சேம நல நிதி உள்ளிட்ட பணப்பலன்கள் அவருக்கு ரூ.50 லட்சம் வரை கிடைக்கும். எனவே, 1956ம் ஆண்டின் இந்து குழந்தைகள் தத்து எடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி, எனது தந்தை பெறும் பணப் பலன்களின் ஒரு பகுதி தொகையான ரூ.20 லட்சத்தை திருமண செலவுக்காக வழங்க வேண்டும்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி நீதிமன்றம், ‘திருமண செலவுக்காக  தந்தை சம்பாதித்த பணத்தை மகள் பெறுவதற்கு  சட்டத்தில் இடம் இல்லை,’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் ராஜேஸ்வரி மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் கவுதம் பாதுரி, சஞ்சய் எஸ். அகர்வால் ஆகியோர்  அடங்கிய அமர்வு  கடந்த 21ம் தேதி விசாரித்தது, அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,‘இந்து குழந்தைகள் தத்து எடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்படி, ஒரு பெண் தனது பெற்றோரிடம் இருந்து திருமண செலவுக்காக பணம் கோர உரிமை உள்ளது,’ என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: