தோனி போல் கூலாக செயல்பட்டு தினேஷ் கார்த்திக் வெற்றி தேடித்தந்தார்: கேப்டன் டூ பிளசிஸ் பாராட்டு

மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை டிஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. டாஸ் வென்ற பெங்களூரூ பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 18.5 ஓவரில் 128 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக ரஸ்சல் 25, உமேஷ்யாதவ் 18, சாம் பில்லிங்ஸ் 14 ரன் எடுத்தனர். பெங்களூரூ பந்துவீச்சில் ஹசரங்கா டி சில்வா 4, ஆகாஷ் தீப் 3, ஹர்சல்பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய பெங்களூரு 19.2 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் ஷெர்பேன் ரூதர்போர்ட் 28, ஷாபாஸ் அகமது 27, டேவிட் வில்லி 18, தினேஷ் கார்த்திக் நாட்அவுட்டாக 14 ரன் எடுத்தனர்.

கடைசி ஓவரில் 10 ரன் தேவைப்பட, ரஸ்சல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர், 2வது பந்தில் பவுண்டரி அடித்து தினேஷ் கார்த்திக் வெற்றிபெற வைத்தார். கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சவுத்தி 3 விக்கெட் வீழ்த்தினார். முதல் போட்டியில் டெல்லியிடம் தோல்வி அடைந்த பெங்களூரு நேற்று வெற்றி கணக்கை தொடங்கியது. அந்த அணியின் ஹசரங்கா டி சில்வா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் பெங்களூரு கேப்டன் டூபிளசிஸ் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சி, நல்ல வெற்றி. குறைந்த ஸ்கோர் என்பதால் சேசிங்கில் பாசிட்டிவாக தொடங்குவது முக்கியமானது. கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். பிட்ச்சில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இருந்தது. இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் 200 v 200 என ஸ்கோர் எடுக்க முடிந்தது. இன்றிரவு அது 120 v 120, மிகவும் நன்றாக இருந்தது, தினேஷ்கார்த்திக் அனுபவம் உதவியது.

அவர் கடைசி நேரத்தில் டோனி போல் கூலாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தார், என்றார். கேகேஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், பந்துவீச இறங்கும்போது, மைதானத்தில் இந்த போட்டி நமது குணத்தையும் அணுகுமுறையையும் வரையறுக்கப் போகிறது என்று சொன்னேன். இந்த ஆட்டத்தை கடைசி ஓவர் வரை நாங்கள் கொண்டு சென்ற விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. தவறுகளை சரி செய்து அடுத்த போட்டிக்கு திரும்புவோம். ஹசரங்கா நன்றாக பந்துவீசினார். எனது விக்கெட்டை எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றார். நாங்கள் அவரை ஆப்-ஸ்பின்னராக போல் எதிர்கொள்வோம் என முடிவு செய்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் நல்ல லைனில் பந்து வீசினார். பிட்ச் அவருக்கு சாதகமாக இருந்தது. அவருக்கு வாழ்த்துகள், என்றார்.

Related Stories: