வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை...10.5% உள் ஒதுக்கீடு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!

புதுடெல்லி: தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே உள் ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டிற்கான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் பாமக உள்ளிட்டோர் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 23ம்  ஒத்திவைத்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இன்று காலை நீதிபதிகள் எல்.நாகேஸ்வராவ் மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பில், உள் ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு தர வேண்டும்.உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும். சாதி அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீட்டை முடிவு செய்ய முடியாது. வன்னியர்களை மட்டும் தனி பிரிவாக கருதுவதற்கு அடிப்படை முகாந்திரம் இல்லை.

வன்னியர் உள் ஒதுக்கீடு சட்டம் அரசியல் சட்டத்தின் 14,16வது பிரிவுகளுக்கு விரோதமானது. வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு, பாமக உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்,இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories: