மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி தமிழகத்தில் இன்று 60% பேருந்துகள் இயங்கும்: தொமுச, சிஐடியு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நேற்று தொமுச பொருளாளர் நடராஜன், சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஆறுமுக நாயினார் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இன்றும் (நேற்று), நாளையும் (இன்று) மத்திய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தன. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது. 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை. இந்தசூழலில் பள்ளிகளில் தேர்வு நடக்கிறது. பொதுமக்களுக்கும் பல்வேறு சிரமங்கள் உள்ளன என்ற கருத்துகள், கோரிக்கைகள் வருகிறது. எனவே, நாளை நடைபெறக்கூடிய வேலைநிறுத்த திட்டத்தை மாற்றி அமைக்கிறோம்.

அதன்படி, நாளைய (இன்று) போராட்டம் நடைபெற்றாலும் பேருந்துகள் ஓடும். தமிழகம் முழுவதும் இன்று 60 சதவீத பேருந்துகள் இயங்கும். அதேநேரத்தில் முன்னணி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இது அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். நாங்கள் கலந்துபேசி இந்த முடிவை மேற்கொண்டுள்ளோம். அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் வேலைநிறுத்தம் நடைபெறும். மக்கள், மாணவர்கள் நலன் கருதி இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். இதையொட்டி அந்தந்த அமைப்புகள் கூடி முடிவெடுத்துக்கொள்வார்கள்.

Related Stories: