ஆப்கான் பெண்களுக்கு உயர் கல்வி கொடுங்கள்: 16 நாட்டு பெண் அமைச்சர்கள் அறிக்கை

பெர்லின்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா படைகள்  வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இந்நாட்டில் மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில், 6ம் வகுப்பு மேல் பெண்கள் படிப்பதை தடை செய்தனர். சில தினங்களுக்கு முன் இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லஅனுமதி அளித்த தலிபான் அரசு, கடைசி நேரத்தில் அந்த பள்ளிகளை மூடியது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம். போஸ்னியா, கனடா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், பிரிட்டன் உள்பட 16 நாடுகளின் வெளியுறவுத் துறை பெண் அமைச்சர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்நிலை பள்ளிகளில் கல்வி மறுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அதிரச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்து  மாணவிகளுக்கான அனைத்து கல்வி நிலையங்களையும் உடனே திறக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

* விமானத்தில் பெண்கள்  தனியாக செல்ல தடை

ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு பெண்கள் தனியாக செல்வதற்கும்  தலிபான்கள் நேற்று தடை விதித்தனர். விமானத்தில் நேற்று செல்ல இருந்த 10க்கும் மேற்பட்ட பெண்களை அவர்கள் திருப்பி அனுப்பினர். இவர்களில் சிலர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், ஆப்கானின் இரட்டை  குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் கூட ஆண்கள் துணையின்றி விமானத்தில் செல்லக் கூடாது என்று தடை விதித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: