ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் ரூ.2.25 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு: வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை, பொன்னேரியில் ரூ.2.25 கோடி ஆக்கிரமிப்பு நிலங்களை வருவாய்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கிராமங்களில்  நீர்நிலை புறம்போக்கு நிலங்களை  தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசுக்கு  தொடர்ந்து புகார்கள் வந்தன. அவரது உத்தரவின்பேரில் வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அதில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள வெங்கடாபுரம், சென்னங்காரணி,  வடதில்லை, பேரிட்டிவாக்கம், திருகண்டலம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 6.30 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆறு மற்றும் ஏரிகளை ஆக்கிரமித்து நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இந்த  நிலங்களை ஊத்துக்கோட்டை தாசில்தார் ரமேஷ் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள்  கண்டறிந்து 5.5 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு சுமார்  ரூ.1.25 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்வதை  கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்  என வருவாய்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி: தேவதானம் ஊராட்சியில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை காட்டூர் நில அளவையர் அருண்குமார், காட்டூர் வருவாய் ஆய்வாளர் சஞ்சீவி பெருமாள், கிராம நிர்வாக அலுவலர்கள் மஞ்சு பார்கவி, மெய்யழகன், நல்லீஸ்வரன் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோர் மீட்டனர். இதன் மதிப்பு மூன்றரை லட்சம் என கூறப்படுகிறது. இதேபோல் பிரளயம்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள விளைந்த பயிர்களை சேதப்படுத்தாமல் பயிர்செய்த விவசாயிகளுக்கு அறுவடை செய்வதற்கான காலக்கெடு விதித்தனர். அதன்படி பொன்னேரி வருவாய் ஆய்வாளர் அன்புசெல்வன், கிராம நிர்வாக அலுவலர் ஹேமாவதி, கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் அறுவடை செய்யும் இயந்திரம் கிடைக்காததால் அப்பகுதி மக்களை வைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.  இதனால் ரூ.1 கோடி மதிப்பு 10 ஏக்கர் மீட்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து பயிர் செய்யக்கூடாது எனவும் எச்சரித்து அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

Related Stories: