உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக காவிரி நிர்வாக ஆணையம், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த நீர் பங்கீட்டு முறையை பின்பற்றி வருகிறது. இருப்பினும் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் தமிழகம், கர்நாடகம் இடையே உரிய முடிவு எட்டப்படாமல் தொடர்ந்து சர்ச்சை நிலையே நீடித்து வருகிறது.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டக்கூடாது என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இதனிடையே மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யபடும் என கர்நாடக சட்டசபையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், “கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது” என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வேலூரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி தீர்ப்பாயம் அளித்துள்ள உத்தரவுகளின் படி தமிழகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், காவிரி ஆற்றில் அணை உள்ளிட்ட எதுவும் கட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இசைவு இல்லாமல் கர்நாடக அரசால் மேகதாதுவில் ஒரு செங்கலை கூட நட முடியாது. இது கர்நாடக அரசுக்கும் நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தான் இறுதியானது. அதற்கு கீழ்படிந்து நடப்பது தான் இந்திய ஜனநாயகம். ஒரு மாநிலமே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், பிறகு இந்தியாவில் ஒருமைப்பாடு எங்கே ஏற்படப்போகிறது? மத்திய அரசு அவ்வளவு சுலபமாக சாய்ந்துவிடாது என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: