மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு பாரபட்சமின்றி நேர்மையாக நடக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

தர்மபுரி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: 5 மாநில தேர்தல் நடந்து முடியும் வரை பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. முடிந்த பின்னர் ஒன்றிய அரசு காஸ், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் ஏற்படும். எனவே, விலையை குறைக்க வேண்டும். இலங்கையில் பொருட்களின் விலை உயர்வால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழர்கள் அகதிகளாக வர தொடங்கி உள்ளனர். மாநில அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமை, தொழிலுக்கும் பாதுகாப்பு இல்லை. இலங்கை கடற்படையினர் வலைகளை சேதமாக்கி தமிழக மீனவர்களை கைது செய்கின்றனர். பாஜ அரசு கடந்த தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என கூறியது. ஆனால், இதுவரை பாதுகாப்பு அளிக்கவில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ₹1,000 கோடி ஒதுக்கி உள்ளது. இது கண்டனத்திற்குரியது. ஒன்றிய அரசு நேர்மையாக நடுநிலையாக இருந்து பிரச்னையை தீர்க்க வேண்டும். மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு வழக்கமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் பெண்கள் கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி செல்வது தடுக்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேளாண்மையையும், சிறுதொழிலையும் இணைக்க வேண்டும். ரஷ்யா-உக்ரைன் போரால் தமிழகம் வந்த மாணவர்களுக்கு கல்வி தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: