வாட்ஸ்அப் எண்ணில் ஊழல் புகார் தரலாம் ஒருவரையும் விட மாட்டேன்: பஞ்சாப் முதல்வர் அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் ஊழல்கள், முறைகேடுகள் பற்றி  பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்ணை முதல்வர் பகவந்த் சிங் மான் அறிமுகப்படுத்தி உள்ளார். பஞ்சாப்  சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. கடந்த 16ம் தேதி முதல்வராக பதவியேற்ற பகவந்த் சிங் மான் பேசுகையில், ‘‘ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் புகார்கள் குறித்து தெரிவிக்க ஹெல்ப்லைன் எண் தொடங்கப்பட உள்ளது’’ என்றார். இந்நிலையில், தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நேற்று சுதந்திர போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவுக்கு பகவந்த் சிங் மான் அஞ்சலி செலுத்தினார்.

இதன் பிறகு பகவந்த் சிங் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ‘ஏற்கனவே அறிவித்தபடி ஊழல், முறைகேடு குறித்து புகார் தெரிவிக்க 9501200200 என்ற தனி ஹெல்ப்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண். யாராவது லஞ்சம் கேட்டால், அதை மறுக்காதீர்கள். ஆனால், அதன் வீடியோ அல்லது ஆடியோவை பதிவு செய்து இந்த  எண்ணுக்கு அனுப்புங்கள். எங்கள் அலுவலகம் அதை ஆய்வு செய்து, நடவடிக்கை  எடுக்கும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என யார் மீது புகார்கள் வந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாதத்துக்குள் பஞ்சாப்பை ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம்’ என்று தெரிவித்தார்.

Related Stories: