ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் சந்திரபாபுவையும், அவரது மகனையும் விமர்சனம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது-தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் பேட்டி

சித்தூர் : ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் சந்திரபாபு, அவரது மகனை விமர்சனம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெலுங்கு தேசம் கட்சி மாவட்ட தலைவர் கூறினார். சித்தூர் தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் நானே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் துணை முதலமைச்சர் நாராயணசாமி தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோரை தரக்குறைவாக பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் நாராயணசாமி வயதில் மூத்தவர். அவர் அரசியலிலும் மூத்தவர். ஆனால் அவரது பேச்சு மட்டும் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.

 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஆந்திர மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல் கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 28 கூலித் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிர் இழந்தார்கள். இதனால் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு பாதிக்கப்பட்ட  குடும்பங்களிடம் நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனை ஆளும் கட்சியினர் தவறாக புரிந்து கொண்டு கோயிலாக கருதப்படும் சட்டமன்ற கூட்டத்தொடரில் சந்திரபாபுவையும், அவரது மகனையும் விமர்சனம் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை இல்லை. மது பாட்டில்கள் விலை உயர்வு இல்லை. மணல் கொள்ளை, போதைப் பொருட்கள் விற்பனை, கஞ்சா விற்பனை, ஹெராயின் விற்பனை இல்லை. ஆனால்  ஜெகன்மோகன் ஆட்சியில் அரசு தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தையும் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அண்டை மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு நாள்தோறும் டன் கணக்கில் லாரிகள் மூலம் மணல் கடத்தி விற்பனை செய்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆளும் கட்சியினர் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது.

 ஜெகன்மோகன் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநில மக்களுக்கு ஒரு நலத்திட்ட உதவிகள் கூட செய்யவில்லை.

ஏராளமான கிராமங்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, சுகாதார வசதி இல்லாமலும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் வெளி மாநிலங்களுக்கு சென்று வேலை செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் வெளிநாடுகளிலிருந்து தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்தது. ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்தது.

ஆனால் இவருடைய ஆட்சியில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்று கூட ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய வில்லை. எதிர்க்கட்சி தலைவரை அவருடைய மகளை விமர்சனம் செய்த மாநில துணை முதலமைச்சர் நாராயணசாமி உடனடியாக எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தெலுங்கு தேச கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில், தெலுங்கு தேசம் கட்சி எஸ்சி பிரிவு தலைவர் சப்தகிரி பிரசாத், துணைத்தலைவர் மேஷாக், மகளிர் சங்க மாவட்ட தலைவி ஒய்.வி.ராஜேஸ்வரி, பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் சண்முகம், முன்னாள் துணை மேயர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: