தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10,000 கோடி எதனால் குறைந்தது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி மோதல்

எந்த காரணத்தால் தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.10 ஆயிரம் கோடி குறைந்தது என்பது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் மற்றும் தமிழக எதிர்கட்சி தலைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் 2022-2023ம் ஆண்டுக்கான பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அவினாசி ப.தனபால் (அதிமுக)  பேசியதாவது: இந்த சட்டப்பேரவைக்கு நான் 7வது முறையாக தேர்வு பெற்றுள்ளேன். கடந்த 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் புதிதாக வருவாயை உயர்த்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. செலவினத்தை குறைக்கவும்  திட்டங்கள் எதுவும் இல்லை. சீர்திருத்தம் செய்ததாக தெரியவில்லை. இப்படியே போனால், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் கடன் சுமைதான் அதிகமாகும்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: கடந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில், அப்போதைய  நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதி பற்றாக்குறை ரூ.84 ஆயிரத்து 686 கோடியாக இருக்கும் என்றார். ஆனால், ரூ.87 ஆயிரத்து 742 கோடியாக அதிகரித்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நிதி பற்றாக்குறை ரூ.92 ஆயிரம் கோடி வரை செல்லும் என்றோம். ஆனால், ரூ.82 ஆயிரம் கோடியாக நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டது. சரியாக திட்டமிட்டதால் ரூ.10 ஆயிரம் கோடி வரை குறைந்தது. அதேபோல், கடன் அளவும் ரூ.5 லட்சத்து 53 கோடியாக குறைக்கப்பட்டது.  2022-2023ம் நிதியாண்டில், நாங்கள் நிதி பற்றாக்குறையை 3.60 சதவீதமாக குறைப்போம். வட்டி செலவினத்தையும் 21.34 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக  குறைப்போம். அடுத்த 2 ஆண்டுகளில், நிதி பற்றாக்குறை, கடன் அளவை மேலும் குறைப்போம்.

எடப்பாடி பழனிசாமி (எதிர்க்கட்சி தலைவர்): 2020-2021ம் ஆண்டில் கொரோனா முதல் அலை இருந்தது. அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகளவில் இருந்தது. 2021-2022-ம் ஆண்டில் கொரோனா 2வது அலை இருந்தாலும், தளர்வுகள் அதிகம் வழங்கப்பட்டன. இதனால், அரசுக்கு வருவாய் அதிகரித்து, கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி கிடைத்தது. அதில் இருந்துதான், நிதி பற்றாக்குறை ரூ.10 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன்: இரண்டாவது அலையின்போது செலவும் அதிகரித்தது. குடும்ப  அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். ஆனால் பேரிடர் இல்லாத  2016-2017ம் ஆண்டு பேரிடர் எதுவும் இல்லை.

அப்படி என்றால், ஏன் வருவாய்  குறைந்தது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: