கோபி அருகே சட்டவிரோதமாக மது விற்றவர் தள்ளிவிட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் காயம்

கோபி : கோபி அருகே மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்றபோது மது விற்பனையில் ஈடுபட்டவர் தள்ளிவிட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ளது நம்பியூர். இங்குள்ள வரப்பாளையம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளவர் ராஜமாணிக்கம். இவருக்கு நம்பியூர் அருகே உள்ள கெடாரை பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மது விற்பனையில் ஈடுபட்டவரை பிடிக்க சென்றனர்.

அப்போது நம்பியூர் அருகே உள்ள ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த வேலன் என்கிற வேலுச்சாமி என்பவர் பைக்கில் நின்று மது விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வேலனை சப்-இன்ஸ்பெக்டர் பிடிக்க முயன்றார். அப்போது வேலன் பைக்கில் தப்பிக்க நினைத்தார். உஷாரான சப்-இன்ஸ்பெக்டர் பைக்கை நிறுத்த முயன்றார். ஆத்திரமடைந்த வேலன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை கீழே தள்ளிவிட்டு தப்பி செல்ல முயன்றார்.

இதில் கீழே விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்திற்கு கால் முறிவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை கோபி டிஎஸ்பி ஆறுமுகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவம் குறித்தும் விசாரணை செய்தார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தள்ளிவிட்டு காயம் ஏற்படுத்திய வேலனை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: