ஏழை மக்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் ரகுபதி உறுதி

சென்னை: ஏழை மக்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை மீதான 2வது நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அந்த வகையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, ஆன்லைன் சூதாட்டத்துக்கு இடைக்கால தடை பெற வேண்டும் என்று  எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

அப்பாவி இளைஞர்கள் பணத்தை இழந்து வாழ்க்கையை இழப்பதை தவிர்க்க உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். ஆன்லைன் சூதாட்டம் குறித்த எந்த சட்டமும் தமிழகத்தில் இதுவரை இயற்றப்படவில்லை. சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஏழை மக்களை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கடந்த ஆட்சியில் அவசரமாக கொன்று வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளோம். உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

Related Stories: