உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது; சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஒன்றிய அரசு, மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆதரித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பேசினர்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் 19ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நேற்று காலை சட்டப்பேரவை கூடியது. கூட்டம் கூடியதும், மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கோ.ஜானகிராமன், என்.கருப்பண்ண உடையார், பெ.மாரப்பன், மு.மு.அ.ரசாக், கா.வேழவேந்தன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கேள்வி-பதில் எடுத்துக் கொள்ளப்பட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு தனி தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன்னர் பேசியதாவது: காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு பெறுவதில் 1968ல் அண்ணா ஆட்சிக்கு வந்தபோது பட்டேலிடம் பேசினார். அதைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் இந்த பிரச்னையில் ஈடுபட்டு போராடினார். அதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் இந்த போராட்டத்தை தோள் மீது சுமத்தார். அதற்கு பின்னால் வந்த ஜெயலலிதா இதை கெசட்டில் போடுவதற்காக ஒரு போராட்டத்தை நடத்தினார். அதற்கு பிறகு வந்த எடப்பாடி பழனிசாமி முடிந்த அளவுக்கு கடிதங்களையும், மற்றவற்றையும் எழுதி செயல்பட்டார். இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த போராட்டத்தை தோளில் தாங்கி நடத்த முன்வந்து இருக்கிறார்.

காவிரி பிரச்னைக்கு அன்றைக்கு எத்தனை குடும்பங்கள் அழிந்தது. அந்த நிலைமை மீண்டும் வர வேண்டாம் என்று அன்றைக்கு தடுத்து நிறுத்தினோம். ஆகையால் அண்டை மாநிலத்தோடு நல்லுறவையும் இந்த அரசு பேணும். அதே நேரத்தில் விட்டு கொடுக்க கூடாது. இந்த மன்றத்தில் இருக்கும் அத்தனை பேரும் தான் இந்த நாட்டை காக்கும் தளபதிகளாக இருக்கக்கூடியவர்கள். எனவே, அந்த கனத்த இதயத்தோடு. ஒரு தீர்மானத்தை படிக்க போகிறேன். யோசனையை தாருங்கள். நானா, நீயா என்று பேசக்கூடாது. அது பெரிய தப்பு. நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும். அந்த தீர்மானத்தை வாசிக்கிறேன்.

அந்த தனி தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: காவிரி நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி 5ம் தேதி அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும் தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு தொழில் நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இம்மான்றம் வலியுறுத்துகிறது.

காவிரி நதிநீர்ப் பிரச்னை ஒரு நீண்டகாலப் பிரச்னையாகும். இதற்கு தீர்வாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரி 16ம் தேதி வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இப்பிரச்னை இரு மாநிலங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்னையாகும். ஆதலால், கர்நாடகா அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக்கூடாது என கர்நாடகா அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இந்த மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

உச்சநீதிமன்றத்தின் 2018 மே 18ம் தேதியின் ஆணையின்படி அதன் 2018 பிப்ரவரி 16ம் தேதி அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது. கர்நாடகா அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக்கொள்கிறது. இவ்வாறு தனித் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்ெகாண்டார். அதைத் தொடர்ந்து அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, தவாக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் ஆதரித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நீர்வளத் துறை அமைச்சர்  மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம். அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

* மேகதாது அணையை கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

* நடுவர் மன்ற தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இறுதி தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ள துடிக்கும் முயற்சியை தமிழக அரசு நிச்சயம் தடுக்கும்.

* அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும்.

* தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை அரசு நிச்சயம் பாதுகாக்கும்.

Related Stories: