மீனவர்களின் மீன்பிடி பிரச்னை 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

பொன்னேரி: பழவேற்காடு மீனவர்களின் மீன்பிடி பிரச்னை 9ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பழவேற்காடு அருகே உள்ள ஆண்டிகுப்பம் மீனவ கிராமத்தில் மீன்பிடிதொழில் பிரச்னை காரணமாக மூன்று தரப்பினர் ஒரு பிரிவாகவும் இரண்டு தரப்பினர் மற்றொரு பிரிவாகவும் இணைந்து தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இதற்கான சமாதான பேச்சுவார்த்தை 8 கட்டங்களாக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் முதல் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வரை பல்வேறு கட்டமாக  பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகம் ஏற்படவில்லை.

இந்நிலையில், நேற்று 9வது கட்ட பேச்சுவார்த்தை பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ தலைமையில் கோட்டாட்சியர் (பொ) பரமேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த மூன்று தரப்பினர் கலந்து கொண்டனர். மற்றொரு பிரிவை சேர்ந்த இரண்டு தரப்பினர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதில் கலந்துகொண்ட ஒரு தரப்பினர் தாங்கள் மீன்பிடிக்க செல்லாமல் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் எனவும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர். இரு தரப்பினரும் கலந்துகொள்ளும் பட்சத்தில் கூட்டத்திற்கு சுமூக தீர்வு ஏற்படலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதில் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், பொன்னேரி காவல்துறை ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: