திருவேற்காட்டில் பொது இடங்களில் கழிவுநீர், குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை: நகர்மன்ற தலைவர் எச்சரிக்கை

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கழிவுநீர் லாரி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி, துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ், நகராட்சி ஆணையர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ், கவுன்சிலர்கள் இளங்கோ, பரிசமுத்து மற்றும் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கலந்துகொண்டனர். இதில் நகர்மன்ற தலைவர் என்.ஈ.கே.மூர்த்தி பேசியதாவது:  திருவேற்காடு நகராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வது நம் அனைவரின் கடமை. நம்மை நம்பி வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு நல்லது செய்யவேண்டும். கழிவுநீர் லாரி வைத்திருப்பவர்கள் முறையாக நகராட்சியில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கண்ட இடங்களில் கழிவுநீரை கொட்டக்கூடாது. அவ்வாறு கழிவுநீரை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், சுற்றுப்புறமும் மாசடைகிறது. நோய்த் தொற்றும் ஏற்படுகிறது. நகராட்சி பகுதிகளில் பதிவு பெற்ற வாகனங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரை திருமழிசை மற்றும் முகப்பேர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு விடவேண்டும்.

அதையும் மீறி நகராட்சி பகுதிகளில் சாலையோரம், ஆறு, குளம், குட்டை போன்ற நீர்நிலைப் பகுதிகளில் கழிவுநீரை கொட்டினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் தயவு தாட்சன்யம் காட்டமாட்டோம். மக்களின் சுகாதாரம் மட்டுமே முக்கியம். கழிவுநீர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவும் நகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: