வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2வது நாளாக தீயை அணைக்க போராட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் 2 வது நாளாக 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக தீ விபத்து நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. தற்போது அங்கு குப்பைகள் கொட்டுவதற்கு நிறுத்தப்பட்டு மலை போல் குவிந்த குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாகவும், மக்காத  குப்பை கழிவுகள் சிமெண்ட் ஆலைகள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 8 சதவீத குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை வேகப்படுத்தும் வகையில் கூடுதலாக 4 தரம் பிரிக்கும் இயந்திரங்கள் வைத்து வேலை செய்ய வேண்டும் என மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு வருடத்துக்குள் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு, வலம்புரிவிளை காலி மைதானம் போல் மாற்றப்பட வேண்டும் என்பது தான் மாநகராட்சியின் திட்டம் ஆகும்.

இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை 1 மணியளவில் தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென பரவியது. கொளுந்துவிட்டு எரிந்த தீயால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. சுற்று வட்டார பகுதியில் துர்நாற்றம் வீசியது. நாகர்கோவில், தக்கலை, திங்கள்சந்தை ஆகிய தீணைப்பு நிலையத்தில் உள்ள வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக தீயை அணைக்கும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ அணைத்த பகுதிகளில் இருந்து வெளியேறும் சாம்பல் துகள்கள் அந்த பகுதியில் சாலைகளில் செல்பவர்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: