திருச்சி காவல் நிலையத்தில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு

திருச்சி: சென்னையில் திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அவருக்கு, திருச்சியில் 2 வாரம் தங்கியிருந்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் திங்கள், புதன், ெவள்ளி கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 14ம் தேதி மற்றும் 16ம் தேதி திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேசனில் ஜெயக்குமார் கையெழுத்திட்டார். அந்த இரண்டு நாட்களும் அவருடன் அதிக அளவிலான தொண்டர்கள் வந்து தொடர்ந்து முழக்கமிட்டனர்.

இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பரஞ்சோதி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கொரானா விதிமுறைகளை மீறி கூட்டம் கூடியது, அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கன்டோன்மென்ட் போலீசார் நேற்று இரவு வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமையான இன்று 3வது முறையாக கன்டோன்மென்ட் காவல் நிலையம் வந்து கையெழுத்திட்டார்.

Related Stories: