என்கவுன்டரில் சுட்டுக் கொலை ரவுடி நீராவி முருகனுக்கு களக்காட்டில் அடைக்கலம் கொடுத்தது யார்? திண்டுக்கல் கூடுதல் எஸ்பி விசாரணை

களக்காடு: என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி நீராவி முருகனுக்கு நெல்லை களக்காட்டில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரைச் சேர்ந்தவர் நீராவி முருகன் (45). சென்னையில் வசித்து வந்தவன் மீது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட 86 வழக்குகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார், எஸ்ஐ இசக்கி ராஜா தலைமையில் ரவுடி நீராவி முருகனை தேடி வந்தனர். இதில் அவன், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு வந்த தனிப்படையினர் அவனை பிடிக்கச் சென்ற போது, நீராவி முருகன் திடீரென போலீசாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றான். இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் நீராவி முருகன் குண்டு பாய்ந்து உயிரிழந்தான்.

இதனிடையே கடந்த 3 நாட்களாக நீராவி முருகன் களக்காடு மற்றும் வள்ளியூரில் நீராவி முருகன் நடமாட்டம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அங்கு களக்காடு, வள்ளியூரில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், அவனுக்கு பின்புலமாக இருந்து உதவிகள் செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். ரவுடி நீராவி முருகன் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் டாக்டர் சக்திவேல் வீட்டில் கொள்ளையடித்தது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பி லாவண்யா தலைமையில் அமைக்கப்பட்டிருந்த தனிப்படையினர், நெல்லை வந்தனர்.  

நீராவி முருகன் அரிவாளால் வெட்டியதில் காயமடைந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.ஐ. இசக்கிராஜா உட்பட 4 போலீசாரை கூடுதல் எஸ்பி லாவண்யா நேற்று காலை நேரில் சந்தித்து விசாரித்தார். பின்னர் என்கவுன்டர் நடந்த இடத்தை பார்வையிட்டார். உறவினர்களிடம் உடல் ஒப்படைப்பு: என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி நீராவி முருகன் உடல், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து முதலில் அவரது உடல் ஸ்கேன் செய்யப்பட்டது. பின்னர் நாங்குநேரி மாஜிஸ்திரேட் ராம்கிஷோர் முன்னிலையில் நேற்று காலை பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் மாலை 5 மணிக்கு நீராவி முருகன் உடலை அவரது சகோதரி மாரியம்மாள், கணவர் ஆறுமுகம் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: